பக்கம் எண் :

சீறாப்புராணம்

755


முதற்பாகம்
 

2021. சரகி றங்கிநன் னபியெனும் பெரும்பெயர் தரித்த

     வருட மைந்தென வரவரு மிறசபு மாதந்

     தரும நேருது மானொடு றுக்கையா தமையு

     மிருளும் போதனுப் பினர்அப சாவெனுந் தேயம்.

7

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு சம்மதிக்கவே ஷறகினையுடைய நமது தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கமானது இறங்கி நல்ல நபியென்னும் பெருமை பொருந்திய அபிதானத்தைத் தரிக்கப் பெற்ற வருடமானது ஐந்தென்றுவர; வரா நிற்கும் றஜபுமாதம் உண்ணியத்தையும் சத்தியத்தையுமுடைய உதுமான் றலியல்லாகு அன்கு அவர்களோடு றுக்கையா றலியல்லாகு அன்ஹா அவர்களையும் இருட்டுகின்ற சமயத்தில் ஹபஷாவென்னும் நகரத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

 

2022. திருந்துந் திண்புய நபிதிரு மகளுடன் சிறப்ப

     விரிந்த பூங்குழன் மடந்தையர் மூவரும் வியப்பப்

     பொருந்துந் தீனவர் பதின்மரும் புகழுது மானும்

     பிரிந்தி டாதுசென் றந்தநா டடைந்ததற்பின்னர்.

8

      (இ-ள்) செவ்வைப்பட்ட திண்ணிய தோள்களையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் அழகிய மகளாராகிய றுக்கையா றலியல்லாகு அன்ஹா அவர்களுடன் சிறக்கும்படி விரிந்த அழகிய கூந்தலையுடைய மூன்று பெண்களும் ஆச்சரியப்படும் வண்ணம் பொருந்திய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தைக் கைக்கொண்டவர்களான பத்து சஹாபாக்களும் கீர்த்தியையுடைய உதுமான் றலியல்லாகு அன்கு அவர்களும் ஒருவரையொருவர் நீங்காது நடந்து சென்று அந்த ஹபஷா வென்னும் நகரம் போய்ச் சேர்ந்ததின் பின்னர்.

 

2023. சந்த னந்திகழ் புயஅபித் தாலிபு தவத்தால்

     வந்த சஃபறு மவருடன் மைந்தர்கள் சிலரு

     நந்து வெண்டர ளந்திகழ் நதியப சாபாற்

     பிந்தி டாதொரு முறைமறை தனித்தனுப் பினரே.

9

      (இ-ள்) அன்றியும், அந்நபிகட் பெருமானவர்கள் சந்தனக் குழம்புப் பிரகாசிக்கப் பெற்ற தோள்களையுடைய அபீத்தாலிபென்பவரின் தவத்தினால் இவ்வுலகின்கண் தோற்றமாகிய ஜஃபறு றலியல்லாகு அன்கு அவர்களையும் அவர்களோடு சில மைந்தர்களையும் சங்கினங்களினது வெள்ளிய முத்துக்களானவை ஒளிருகின்ற ஆற்றையுடைய ஹபஷாநகரத்திற்கு ஒரு தடவையிற் பிந்தாது இரகசியத்துடன் ஏகமா யனுப்பி வைத்தார்கள்.