முதற்பாகம்
ஒப்பெழுதித்
தீர்ந்த படலம்
கலிவிருத்தம்
2141. பரிவுறு
நபியெனும் பட்ட மாகிய
வருடமே ழினிற்றின முகற்ற மாத்தையிற்
றெரிதரும் பிறைமுத லிரவிற் சேரலர்க்
குரியவர் குறைசிக ளொருங்கு கூடினார்.
1
(இ-ள்) அன்பைப் பொருந்திய நபி
யென்னும் பட்டமானது ஆகப் பெற்ற ஏழாவது வருடத்தின்
முஹர்ற மாதத்தில் சந்திரனானது தோற்றா நிற்கும்
முதற்றின இரவில் சத்துராதிகட்குச்
சொந்தப்பட்டவர்களான குறைஷிக் காபிர்கள் ஒன்று
சேர்ந்தார்கள்.
2142. கறைகெழு
மனக்கொடுங் காபி ராகிய
குறைசியந் தலைவர்கள் பலருங் கூட்டமிட்
டறபிக டம்முட னாய்ந்து வாய்மையான்
முறைதவ றிடுமொரு கரும முன்னினார்.
2
(இ-ள்) களங்க மானது நிறையப் பெற்ற
இருதயத்தையுடைய கொடிய காபிர்களான அழகிய குறைஷித்
தலைவர்கள் பலரும் அவ்வாறு கூட்டமிட்டு மற்றும்
அறபிகளுடன் ஆராய்ந்து தங்களின் வலிமையினால் ஒழுங்கு
தப்பிய ஒரு காரியத்தை நினைத்தார்கள்.
2143. ஆசிமுத் தலிபென வடுத்துக்
கூடிய
மாசறு மிருகுலத் தவரின் வாணிகம்
பேசுதல் சம்பந்தம் பிறவு நீக்கிவிட்
டேசறு சாதியின் விலக்கிட் டாரரோ.
3
(இ-ள்) அவ்விதம் நினைத்த அவர்கள்
குற்றமற்ற ஹாஷிம், முத்தலிபென்று நெருங்கிக் கூடிய இரண்டு
குடும்பத்தார்களின் வியாபாரத்தையும், பேசுதலையும்,
சம்பந்தத்தையும், மற்றவைகளையும் ஒழித்து விட்டுக்
களங்க மற்ற சாதியினது விலக்கு வைத்தார்கள்.
2144. நெருப்புநீ
ரிவைமுத னீக்கி நீணிலத்
திருப்பவ ரெவருமங் கவர்க்கி டங்கொடா
துருப்பமோ டிகல்வதே யெவர்க்கு மூழென
வரைப்புற வொருமுறி வரைந்திட் டார்களால்.
4
(இ-ள்) அன்றியும், அக்கினி,
தண்ணீராகிய இவை முதலானவைகளை யொழித்து நீண்ட இந்தப்
பூமியின்கண்
|