பக்கம் எண் :

648சித்தாந்த சாத்திரம்

ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம்
அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்.             34

     (உரை) ஓங்காரமே நல் திருவாசி - பிரணவந்தானே நல்ல திருவாசி
யாகவும், - உற்று அதனில் நீங்கா எழுத்தே நிறை சுடராம் - பொருந்தி
அப்பிரணவத்தைவிட்டு நீங்காத பஞ்சாக்கரமே நிறைந்த உள்ளொளியாகவும்,
- ஆங்காரம் அற்றார் அறிவர் - யான் எனது என்னுஞ் செருக்கற்றவர்கள்
அறிவார்கள், - அணி அம்பலத்தான் ஆடல் இது பெற்றார் பின் பிறப்பு
அற்றார் - அழகிய திருவம்பலத்தான் செய்யும் நிருத்தமாகிய இதனைத்
தரிசித்தவர்களே பின்பு சனன மரண மற்றவர்கள்.                   34

தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம்முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.            35

     (உரை) துடியதனில் தோற்றம் - டமருகமேந்திய ஸ்ரீ அத்தத்திலே
சிருஷ்டியாகவும், - அமைப்பில் தோயும் திதி - அமைத்த ஸ்ரீ அத்தத்திலே
ஆன்மாப் பொருந்தும் இரக்ஷையாகவும், - சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்
- சொல்லப்பட்ட அக்கினியேந்திய ஸ்ரீ அத்தத்திலே மலசங்காரமாகவும், -
ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் - உறுதியாக ஊன்றிய
மலர்போலும் பொருந்திய ஸ்ரீ பாதத்திலே பிரபஞ்சத்தை மறைக்குந்
திரோதமாகவும், - நான்ற மலர்ப்பதத்தே முத்திநாடு - தூக்கிய மலர்போலும்
ஸ்ரீபாதத்திலே அநுக்கிரக முத்தியாகவும் திருக்கூத்துச் செய்வனென்று
விசாரித்தறிவாயாக.                                            35

1மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தானெந்தை யார்பாதம் தான்.            36

1. ஒரு பிரதியில் இது 'மன்னதிகை' என்ற கடைசிப் பாட்டின்பின்
காணப்படுகிறது.