முதற்பாகம்
இசுறாகாண் படலம்
கலிநிலைத்துறை
786.
எரிந்த கட்பொறி
யரவுவந் துறையிட மிவணே
யருந்த வப்பொருண்
முகம்மது மடையிட மிவணே
தெரிந்து காண்பதற்
கிவையிவை குறியெனச் சேர்த்தி
விரிந்த தம்பெருங்
குழுவுட னடந்தனர் விறலோர்.
1
(இ-ள்)
தீயானது சுவாலித்த கட்பொறியினையுடைய சர்ப்பமானது வந்து தங்கிய இடமும் இவ்விடந்தான், அரிய
தவத்தினது பொருளாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் வந்து சேர்ந்த இடமும்
இவ்விடந்தான். அறிந்து பார்ப்பதற்கு இன்னின்னவை அடையாளங்களென்று யாவர்களும் சொல்ல
வெற்றியையுடையவர்களான நபிபெருமானாரவர்கள் தங்களது சேர்மானமாகிய விரிந்த பெரிய
கூட்டத்தோடும் நடந்து போனார்கள்.
787.
பரல்ப ரந்திடந் துகளெழப்
படுமுனைத் திரிகோட்
டிரலை மென்பிணை கன்றுடன்
றிரிந்தகா னேகி
விரித லைச்சிறு
முள்ளிலைச் செங்குலை விளைந்த
கரிய மென்கனி
சொரிதரும் பொழிலையுங் கடந்தார்.
2
(இ-ள்)
அவ்வாறு நடந்துபோனவர்கள் பருக்கைக் கற்கள் பரவி இடமுழுவதிலும் தூசிக ளெழும்பும்படி மிகுந்த
கூர்மைதங்கிய திரிந்த கொம்புகளையுடைய கலைமான்கள் தங்களது மெல்லிய சரீரத்தையுடைய
பெண்மான்களோடுங் குட்டிகளோடும் உலாவித்திரியா நின்ற காடுகளிற்சென்று விரிந்த தலையையும்
சிறிய முட்கள் பொருந்திய இலைகளையும் சிவந்த குலைகளையுமுடைய விளைவுற்ற கரிய மேன்மையவான
பழங்களைச் சிதறாநிற்கும் பேரீத்தங் காவுகளையுந் தாண்டினார்கள்.
788.
ஈத்தம் பேரட
விகள்பல கடந்தய லேகப்
பூத்த மென்மலர்
செறிதரு பொழில்புடை சூழ
வாய்த்த நற்குடிப்
பெயருடன் வழியிடை நெடுநாட்
காத்தி ருந்தபண்
டிதன்மனை தெரிதரக் கண்டார்.
3
|