பக்கம் எண் :

சீறாப்புராணம்

836


முதற்பாகம்
 

       (இ-ள்) வேதங்க ளானவை கிடக்கப் பெற்ற வாயை யுடையவர்களான காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அழகையுடைய அத்தா சென்பவனே! இந்தப் பூலோகத்தின்கண் யூனூசு அலைகிஸ்ஸலா மவர்கள் நபியென்னும் பட்டத்தைப் பெற்றவ ராகிய நெடியவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூ லானவர்கள் யானும் நபி யென்று கூறும் நிலைமையைப் பெற்றேன். அதனால் வலிமையை யுடைய நபிமார்களும் எனக்குப் பொருந்திய உயிர்த் துணைவர்க ளாகுமென்று சொன்னார்கள்.

 

2252. நபிகளுக் கரசாய் வந்த நாயக முரைத்த மாற்றஞ்

     செவியினிற் புகுத வுண்மைத் திருநபி யிவரே யென்னத்

     தவிர்கிலா துள்ளத் துன்னிச் சரணிணை யிறைஞ்சி யேத்திக்

     கவினுறுங் கலிமா வோதிக் கண்ணிணை களிப்ப நின்றான்.

10

      (இ-ள்) நபிமார்களுக் கிராஜராக வந்த நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு கூறிய வார்த்தைகளானவை அந்த அத்தா சென்பவனின் காதுகளில் நுழைய, உண்மையான தெய்வீகந் தங்கிய நபி இவர்களே யென்று தவிராது மனசின்கண் சிந்தித்து அவர்களின் இரு பாதங்களையுந் தொழுது துதித்து அழகு பொருந்திய ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூ லுல்லாஹிழு யென்னும் கலிமாவைச் சொல்லி இரண்டு கண்களும் மகிழும்படி நின்றான்.

 

2253. மக்கநன் னகரில் வாழு முகம்மதுக் கத்தா சென்போ

     னிக்கணத் தீமான் கொண்டா னெனுமொழி யிறபீ ஆதன்

     மக்கள்கேட் டறவு நக்கி மாயவஞ் சகத்துட் புக்கிச்

     சிக்கினன் றொழும்ப னியாமென் செய்குவோ மென்ன நைந்தார்.

11

      (இ-ள்) நன்மை பொருந்திய மக்கமா நகரத்தில் வாழும் முகம்ம தென்பவனுக்கு அத்தா சென்று கூறப்பட்டவன் இச் சமயத்தில் ஈமான் கொண்டா னென்னும் வார்த்தையை இறபிஆ வென்பவனின் புத்திரர்கள் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று மிகவுஞ் சிரித்துத் தொண்டனாகிய அவன் அந்த முகம்மதின் மாயத்தைக் கொண்ட வஞ்சகத்தினகம் புகுந்து சிக்கினான். அதற்கு நாம் என்ன செய்வோமென்று சொல்லி நைத லுற்றார்கள்.