முதற்பாகம்
காம்மாப் படலம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
2298.
நரையொளி பிறங்க வுடம்பெலாந் திரைந்து
நரம்புக டெரிந்திட வறந்து
தெரிதருங் கட்பா வையினொளி மழுங்கித்
திரள்படப் பீழையுஞ் சாடித்
தரிபடா நாசித் துளையினீர் ததும்பத்
தைத்தறக் கிழிந்ததோர் துணியு
மரையிடைக் கிடந்து சரிந்தடிக் கடிவீழ்ந்
தவிழ்ந்திட வொருகரந் தாங்க.
1
(இ-ள்)
நரையினது பிரகாசமானது பிரகாசிக்கவும், சரீர முழுவதும் திரைதலுற்று நரம்புகள் புறத்தில்
தோற்றும் வண்ணம் மெலிந்து தெரியா நிற்கும் கண்களிலுள்ள பார்வையின் ஒளியானது மழுங்கிக்
கூட்டமாகப் பீழையுஞ் சாடி மூக்கினினது துவாரத்தில் ஜலமானது தங்காது ததும்பவும், மிகவும்
தைக்கப் பெற்றுக் கிழிந்ததான ஓர் வஸ்திரமும் அரையி னிடத்து கிடந்து சரிந்து அடிக்கடி
விழுந்து அவிழ்ந்திடவும், அதையொருகையினால் தாங்கவும்.
2299.
உடற்குறை கூனுஞ் செவித்துளை யடைப்பு
மொருகையிற் றடிக்குளா தரவி
னடக்கையி னடக்குந் தலைக்கிடு கிடுப்பு
நனிதர வசைந்து தள்ளாடி
யடிக்கடி யிளைப்பிற் குலுக்கிய கனைப்பு
மறத்தவித் தெழுந்தகோ லமுமா
யிடுக்கணுற் றொருவன் முகம்மது நயினா
ரிருந்திடு மவையகத் தெதிர்ந்தான்.
2
(இ-ள்)
தேகக் குற்றமாகிய கூனும், காதுகளினது துவாரங்களின் அடைப்பும், ஒரு கரத்தில் தடிக்குள்ள
ஆதரவினால் நடக்கையில் நடக்கா நிற்கும் தலையினது கிடுகிடுப்பும், மிகவும் ஆட்டமுற்றுத்
தள்ளாடி அடிக்கடி இளைப்பினாற் குலுக்கப் பெற்ற கனைப்பும், மிக்கத் தவிப்புற் றெழும்பிய
கோலமுமாய் ஒருவன் துன்ப மடைந்து நயினாரான நமது நாயகம் எம் மறைக்குந் தாயகம் நபிகட்
பெருமானார் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்கியிருக்கும் சபையின்கண் வந்து
எதிர்ப்பட்டான்.
|