பக்கம் எண் :

சீறாப்புராணம்

855


முதற்பாகம்
 

2302. நபியெனும் பெயர்பெற் றவர்க்கெவர் கருத்து

         நன்குறத் தெரிந்திடும் விசும்பி

     னவரினும் புதியோன் றூதரின் முதலோ

         ரவனியிற் பின்வரும் நயினா

     ரிவர்கருத் தறியத் தெரிந்திடாப் பொருள்க

         ளிலையெனக் கருத்தினி லிருத்தித்

     தவறுவந் ததுந்தன் றலைமுறைப் பெயருந்

         தனித்தனி விடுத்தெடுத் துரைப்பான்.

5

      (இ-ள்) அவ்வாறு கேட்க அவன் நபியென்னும் அபிதானத்தைப் பெற்றவர்களுக்கு நன்மை பொருந்தும் வண்ணம் யாவர்களுடைய சிந்தனையும் தெரியும். இவர் தேவர்களாகிய மலாயிக்கத்து மார்களைப் பார்க்கிலும் புதிய ஆலத்தை யுடையவனான ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் றசூல் மார்களைப் பார்க்கிலும் முதன்மையானவர். இந்தப் பூமியின்கண் அந்த றசூல்மார்களுக்கெல்லாம் பின்னால் வந்த நயினாராகிய முகம்மதென்னுந் திருநாமத்தையுடையவர். இவரின் கருத்தான துணரும் வண்ணம் அறியாத வஸ்துக்க ளொன்றுமில்லையென்று தனது மனசின்கண் இருக்கச் செய்து தனக்குத் தவறுதல் வந்ததும் தனது தலை முறையின் நாமமும் தனித்தனி எடுத்து விட்டுச் சொல்லுவான்.

 

2303. வானுல கடங்கத் தன்வசப் படுத்தி

          மறுவறும் பெயர்க்கிடர் விளைத்துப்

     பானிற வளைவெண் டிரைக்கடற் பரப்பிற்

          பகையற வொருதனிக் கோலாற்

     றானெனச் செலுத்தி யரசுவீற் றிருந்தோன்

          றணப்பிலாப் பெரும்படை யுடையோ

     னீனமுற் றொழியா மாயைகள் விளைக்கு

          மியலிபு லீசெனும் பெயரோன்.

6

      (இ-ள்) வானலோகமும் அடங்கும் வண்ணம் தனது வசப்படுத்திக் களங்கமற்ற மாந்தர்களுக்குத் துன்பத்தைச் செய்து விரோதமறும்படி பாலினது நிறத்தைக் கொண்ட சங்குகளை யுடைய வெள்ளிய அலைகளினது சமுத்திரப் பரப்பில் ஒப்பற்ற ஏகச் செங்கோல் செலுத்தித் தானென்னும் அகங்காரத்தோடு அரசாக வீறுடனிருந்தவன். பிரியாத பெரிய சேனைகளையுடையவன். ஈனமுற்று மாறாத மாயைகளை யுண்டாக்கா நிற்கும் இயல்பினைப் பெற் இபுலீஸ் லகுனத்துல்லாவென்று கூறும் நாமத்தை யுடையவன்.