பக்கம் எண் :

சீறாப்புராணம்

856


முதற்பாகம்
 

2304. அப்பெரும் புகழோன் றருதிரு மதலை

         யவனினு மும்மடங் காகி

     முப்பெரு நிலத்துந் தன்பெயர் நிறுத்து

         முறைமைய னாளியா சனத்தா

     னொப்பருந் திறலா னிலாக்கிசென் றோங்கி

         யுறும்பெய ரினன்பெறும் புதல்வன்

     கைப்படுங் கதிர்வாட் பெரும்படைக் கிறைவன்

         காயிமென் றுரைத்தகா வலவன்.

7

      (இ-ள்) அந்தப் பெரிய கீர்த்தியை யுடையவனான இபுலீ சென்பவன் இவ்வுலகத்தின்கண் தந்த அழகிய புதல்வனானவனும், அவ்விபுலீ சென்பவனிலும் மும் மடங்காய்ப் பெரிய வானலோகம், பூலோகம், பாதாள லோக மென்னும் மூன்று நிலத்தின் கண்ணும் தனது நாமத்தை நாட்டும் முறைமையை யுடையவனும் சிங்காசனத்தை யுடையவனும், ஒப்புதற் கருமையான வலிமையை யுடையவனும், இலாக்கி சென்று ஓங்கிப் பொருந்திய நாமத்தை யுடையவனுமாகிய, அவன் பெற்ற புத்திரனான கையிற் றங்கிய பிரகாசத்தைக் கொண்ட வாளாயுதத்தை யுடைய பெரிய சேனைகளுக்கு இராஜாவாகிய காயிமென்று கூறப் பெற்ற பெயரை யுடைய அரச னானவன்.

 

2305. காயிமென் பவன்றன் கண்ணிணை மணியாய்க்

          கருத்தினுள் ளுறைந்தமெய்ப் பொருளாய்ச்

     சேயெனப் பிறந்தே னிசைபெறக் காம்மா 

          வென்னுமப் பெயரினன் சிறியே

     னாயிரந் திருப்பேர்க் குரியவன் றூதே

          யமரருக் கரியநா யகமே

     மாயிரும் புவிமா னிடரிடர் களையு

          முகம்மதே யெனப்புகழ்ந் திசைத்தான்.

8

      (இ-ள்) சிறியே னாகிய யான் அக்காயி மென்று கூறப் பெற்றவனின் இரு கண்களினது மணியாகவும், கருத்தினகம் தங்கிய சத்தியவத்து வாகவும், புத்திரனென்று இவ்வுலகத்தின் கண் அவதரித்தேன். கீர்த்திபெறும்படி காம்மா வென்று கூறும் அந்த நாமத்தையுடையவன். ஆயிரம் தெய்வீகந் தங்கிய அபிதானங்களுக்குச் சொந்தமானவ னாகிய ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் றசூ லானவரே! தேவர்க ளாகிய மலாயிக்கத்து மார்களுக்கு அருமையான நாயகமே! மகத்தாகிய பெரிய இந்தப் பூமியினது மாந்தர்களின் துன்பத்தை இல்லாமற் செய்யும் முஹம்ம தென்னுந் திருநாமத்தையுடையவரே! என்று சொல்லித் துதித்துக் கூறினான்.