பக்கம் எண் :

சீறாப்புராணம்

867


முதற்பாகம்
 

விருந்தூட்டுப் படலம்

 

கலிவிருத்தம்

 

2328. புவியி லின்பம் பொருந்திப் புகழ்பெறு

     நபிமு கம்மது நண்பொடுந் தங்கிளை

     யவர்கட் கன்புற் றரிய விருந்தெனக்

     கவலு மென்றலிக் கோதினர் காமுற்றே.

1

      (இ-ள்) இப் பூலோகத்தின்கண் இன்பத்தைப் பொருந்திக் கீர்த்தி பெறா நிற்கும் நமது நாயகம் எம் மறைக்குந் தாயகம் நபிகட் பெருமானான ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியாமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கிருபையோடும் ஆசை கொண்டு அன்புற்றுத் தங்களின் குடும்பத்தாருக்கு அருமை யாகிய விருந்தென்று சொல்லுமென அலி றலியல்லாகு அன்கு அவர்களுக்குக் கூறினார்கள்.

 

2329. தூய தூதுவ ரோதிய சொன்மறா

     நேய முற்றெழுந் தங்கவர் நீண்மனை

     வாயி றோறு நடந்துநல் வாக்கொடும்

     போயி ருந்து விருந்து புகன்றனர்.

2

      (இ-ள்) பரிசுத்தத்தைக் கொண்ட தூதுவ ராகிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்விதங் கூறிய வார்த்தைகளை மறுக்காமல் அலிறலி யல்லாகு அன்கு அவர்களும் நேசமுற்று எழும்பி அவர்களின் நீட்சியைக் கொண்ட வீட்டினது வாயில்கள் தோறும் நடந்து போயுட்கார்ந்து நல்ல வார்த்தைகளோடும் அவ்விருந் தென்னும் சமாச்சாரத்தைக் கூறினார்கள்.

 

2330. மறுவி நாறு முகம்மதுக் கன்புறு

     மறிவ ருமவ ரையர்க்கு முன்னருஞ்

     சிறிய தந்தைய ருமவர் சேய்களு

     முறவி னுற்றவ ருமவ ரொக்கலும்.

3

      (இ-ள்) கஸ்தூரி வாசனை யானது பரிமளியா நிற்கும் நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு அன்பு பொருந்திய அறிதற் கரிய தந்தையரான அப்துல்லா வென்பவருக்குத் தமையரும் சிறிய பிதாவும் அவரின் புத்திரர்களும் பந்துக்களிற் பொருந்தினவர்களும் அவர்களின் பந்துக்களும்.