பக்கம் எண் :

முதற் காண்டம்310

     பிறையை மிதித்துத் தேய்த்து ஒளிரும் கால்களை உடைய மரியாள்,
"இவ்வுலகம் கொண்டுள்ள இன்ப வாழ்வு எல்லாம், ஒருவன் கனவில்
கைப்பற்றிக் கொண்ட செல்வம் என்பதோ? மேகத்தினின்று அசைந்துப்
பாய்ந்த மின்னலோ? சினந்து மூண்ட தீயின் முன் இட்ட வைக்கோலோ?
கடலில் நிறைவாகப் பொழிந்த மழையோ? ஊமையன் சொல்லக் கருதித்
தன் நினைவில் உணர்ந்த தூதுச் செய்தியோ? நாடகம் ஆடுவோர்
இரவில் புனைந்துகொண்ட வேடம் தானோ என்று கொள்ளத் தக்கதாம்"
என்றாள்.

     நினைவு என்பது நினவு என எதுகை நோக்கித் திரிந்தது. 'கொள்ளத்
தக்கதாம்' என்ற தொடர் வருவித்து முடிக்கப்பட்டது.
 
                    49
நிந்தை பொதுளும் வாழ்வடைமுன் னினைவைத் தூண்டு
                               மாசைசுடுஞ்
சிந்தை பொதுளு மென்றடைந்தாற் சிந்தை வருந்த
                               வெறுப்பெய்து
மெந்தை பொதுளுந் தாய்வினையா லிரங்கிப் புரிந்த
                               வருளொன்றே
நந்தை பொதுளு நசைநிறைய நயக்கு மென்றான் மறை
                               வடிவான்.
 
"நிந்தை பொதுளும் வாழ்வு அடை முன், நினைவைத் தூண்டும்
                                 ஆசை சுடும்,
சிந்தை பொதுளும் என்று அடைந்தால,் சிந்தை வருந்த
                                 வெறுப்பு எய்தும்,
எந்தை, பொதுளும் தாய் வினையால், இரங்கிப் புரிந்த அருள்
                              ஒன்றே
நந்தை பொதுளும், நசை நிறைய நயக்கும்" என்றான் மறை
                                 வடிவான்.

     வேதத்தின் வடிவமான சூசை, "நிந்தனை நிறைந்த இவ்வுலக வாழ்வை
அடையப் பெறுமுன், அதனை அடைய வேண்டுமென்று நினைவைத்
தூண்டிக் கொண்டேயிருக்கும் ஆசை துன்பம் தரும். மனம் நிறைவு
பெறுமென்று கருதி அதனை அடையப் பெற்றாலோ, அம் மனமே
வருந்துமாறு அதன் மேல் வெறுப்பு ஏற்படும். அன்பு நிறைந்த தாயின்
செயலுக்கு ஒப்பாக, நம் தந்தையாகிய ஆண்டவன் இரங்கிச் செய்த அருள்
ஒன்று மட்டுமே வளர்ந்து பெருகும் ஆசை நிறைவு பெறுமாறு இன்பம்
பயக்கும்" என்றான்.