பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்12

                      21
நல்வினை யுலந்த போழ்தின் னலமெலா மகலும் போலக்
கொல்வினை யறுப்ப வந்த குணத்தொகை யிறைவன் போக
வல்வினை மருளிற் பொங்கு மல்லவை யுயிரை வாட்டப்
புல்வினை மல்கிச் சீலம் புரிநலம் போயிற்றன்றோ.
 
நல்வினை உலந்த போழ்தின் நலம் எலாம் அகலும் போல,
கொல் வினை அறுப்ப வந்த குணத் தொகை இறைவன் போக,
வல் வினை மருளின் பொங்கும் அல்லவை உயிரை வாட்ட,
புல் வினை மல்கி, சீலம் புரி நலம் போயிற்று அன்றே.

     நற்செயல் அழிந்த போதே நலமெல்லாம் நீங்குதல் போல, கொல்லும்
தன்மை வாய்ந்த பாவ வினையை அறுக்க அவதரித்து வந்த, குணமெல்லாம்
தொகையாகக் கொண்ட ஆண்டவன் நீங்கிப் போகவே, வலிமையின்
வயப்பட்ட அறிவு மயக்கத்தால் பெருகும் பாவங்கள் உயிரை வாட்ட,
அதனால் தீவினை பெருகி, நல்லொழுக்கத்தால் வரும் நன்மையெல்லாம்
போயிற்று.

     அல்லவை - அறம் அல்லாதவை: மறங்கள் - பாவங்கள் நல்வினை
- புல்வினை.

 
                  22
இருள்புரி கங்கு னாப்ப ணிரிந்தறக் கடலோன் போக
வருள்புரி வுணர்வு காட்சி யறந்தவஞ் சுருதி தானந்
தெருள்பொறை நீதி வீரஞ் சீர்தகை யுறுதி ஞானம்
பொருள்புகழ் மற்றப் பொலிநலம் போயிற் றன்றே.
 
இருள் புரி கங்குல் நாப்பண் இரிந்து அறக் கடலோன் போக,
அருள் புரிவு உணர்வு காட்சி அறம் தவம் சுருதி தானம்
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம்
பொருள் புகழ் புலமை மற்றப் பொலி நலம் போயிற்று அன்றே.
      
     
இருளைச் செய்யும் இரவின் நடுவே அறக் கடலாகிய ஆண்டவன்
நீங்கிச் செல்லவே, அருளும் அன்பும் உணர்வும் அறிவும் அறமும்
தவமும் வேதமும் கொடையும் உறுதியும் ஞானமும் பொருளும் புகழும்
புலமையும் மற்றுமாக ஒரு நாட்டைப் பொலியச் செய்யும் நலமெல்லாம்
போயிற்று.