பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்11

எல் இயல் படச் சுடர் இரவில் தோற்றினார்;
பல் இயம் கடல் ஒலி பட முழக்கினார்;
அல்லி அம் குழவியை அளவு இல் வாழ்த்தினார்;
கல்லியம் பாத் தொடை கனியப் பாடினார்.

     அவ்வானவர் பகலின் தன்மை கெடுமாறு ஒளிரும் இரவு போல்
அதனைத் தோன்றச் செய்தனர்; கடலின் ஒலியும் கெடுமாறு பல இசைக்
கருவிகளை முழக்கினர்; ஆம்பல் மலர் போல் அழகிய அக்குழந்தையை
அளவில்லாது வாழ்த்தினர்; தேன் போன்ற பாடல்களைத் தொடைநயம்
கனியப் பாடினர்.

     தொடை - எதுகை; மோனை போன்ற பாடல் உறுப்புக்கள்.

                  நாதன் நீங்க நலமெலாம் நீங்கல்

     - விளம், - மா, - தேமா, - விளம், - மா, - தேமா

                 20
வார்வளர் முரசு மாரா வரிவளர் வளையு மூதா
தேர்வள ருருளுஞ் செல்லா தெருவள ரரவுந் தோன்றா
வூர்வள ரசைவு மில்லா வுறங்கிய சாமத் தேகிச்
சீர்வள ருயிர்போ யவ்வூர் செத்துடம் பொத்த தன்றே.
 
வார் வளர் முரசும் ஆரா, வரி வளர் வளையும் ஊதா,
தேர் வளர் உருளும் செல்லா, தெரு வளர் அரவும்
                                     தோன்றா,
ஊர் வளர் அசைவும் இல்லா உறங்கிய சாமத்து ஏகி,
சீர் வளர் உயிர் போய் அவ் ஊர் செத்த உடம்பு ஒத்தது
                                     அன்றே

     வாரால் அடித்துப் பிறக்கும் முரசு முழங்காமலும், வரிகளைத்
தன்பால் கொண்டுள்ள சங்கு ஊதாமலும், தேரோடுபொருந்திய சக்கரம்
உருண்டு செல்லாமலும், தெருவிலே வளரும் ஆரவாரம் தோன்றாமலும்,
ஊரில் காணப்படும் நடமாட்டம் இல்லாமலும் உறங்கிக் கிடந்த நள்ளிரவில்
இவர்கள் நீங்கிச் சென்றமையால், அவ்வூர் தன் சிறப்பு வளர்வதற்குக்
காரணமான உயிர்போகச் செத்த உடம்பு போன்றது.

     'அன்றே' - இங்கும், தொடரும் பாடல்களிலும் அசைநிலை : வரி
- சங்கைச் சுற்றிக் காணப்படும் கோடு. அது 'புரி' எனப்படும். புரியின்
போக்கு நோக்கி, வலம்புரி இடம்புரி எனச் சங்கு இருவகைப்படும்.
வலம்புரிச் சங்கே சிறப்புக் கொண்டது. 'செத்தவுடம்பு' என்பது, 'செத்துடம்பு'
என வந்தது தொகுத்தல் விகாரம். அரவு - அரவம் என்பதன் கடைக்குறை.