பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 18

      நாபன் சொன்ன உரைகளைக் கேட்டு, தான் விரும்பித் தேடிய
விலையுயர்ந்த பொருளைக் கண்டெடுத்தாற்போல மன்னன் உள்ளம்
மலர்ந்து தேறினான். அங்கு அவன்மீது தன் மலர் போன்ற கண்ணை
மகிழ்ச்சியோடு திருப்பித் தேன் போன்று மிகுந்த ஆர்வத்தைக் காட்டினான்.
அதனைக் கண்டு, வண்டுபோல் மயங்கிய மற்றவரும் அவன் சொன்னதற்கு
ஒத்த உரைகளைத் தாமும் சொல்லினார்.

 
                           30
நன்றென் றாயினு நடுக்குறப் பெத்தில நகர்க்கண்
ணன்றங் கெய்திய வன்னவ னில்லையா லகன்றே
யின்றெங் குள்ளனென் றாயினு மியம்புவ ரில்லைப்
பின்றின் றாந்தொழிற் பேசுமி னென்றனன் பெருமான்
 
"நன்று என்று ஆயினும், நடுக்கு உறப் பெத்தில நகர்க்கண்
அன்று அங்கு எய்திய அன்னவன் இல்லையால்; அகன்றே
இன்று எங்கு உள்ளன் என்றாயினும் இயம்புவர் இல்லை;
பின்று, இன்று ஆம் தொழில் பேசுமின்" என்றனன் பெருமான்.

      அவற்றைக் கேட்ட அரசர் பெருமான், "அவ்வாறு அவனைக்
கொல்வது நன்றேயாயினும், நாம் நடுங்குமாறு பெத்திலம் என்னும் நகரில்
அன்று வந்துதித்த அவன் அங்கு இல்லை; அந்நகரை விட்டகன்று இன்று
எங்கு உள்ளானென்றேனும் இயம்புவார் இல்லை; இவ்வாறு ஏற்பட்ட பின்,
இன்று அவனைக் கொல்வதற்கான முயற்சி பற்றிப் பேசுங்கள்," என்றான்

 
                       31
நகைத்து மாதிய னரபதி வாழ்கென நவிலுந்
துகைத்து மொய்த்தவெந் துயரறச் சொன்னதற் கமைகிற்
பகைத்து வந்தவன் பழியறுத் துன்முடி பெயரா
முகைத்து நாடெலா முரணில வாழ்வது காண்பாய்,
 
நகைத்து மாதியன், "நரபதி வாழ்க" என நவிலும்;
"துகைத்து மொய்த்த வெந்துயர் அறச் சொன்னதற்கு அமைகின்,
பகைத்து வந்தவன் பழி அறுத்து, உன் முடி பெயரா,
முகைத்து நாடெலாம் முரண் இல வாழ்வது காண்பாய்.