|
9 |
நான ளிக்குமிந்
நாட்டின்மற் றொருவன்வந் தவற்கே
மான ளிக்குமிக் கோன்மையீந் திறைஞ்சவோ வளமூழ்த்
தூன ளிக்குமிவ் வுடல்விட நாளிதோ வெனவான்
கோன ளிக்குமிக் கொள்கையி றான்மயல் கொண்டான். |
| |
"நான்
அளிக்கும் இந்நாட்டில் மற்றொருவன் வந்து, அவற்கே
மான் அளிக்கும் இக்கோன்மை ஈந்து இறைஞ்சவோ? வளம் ஊழ்த்து
ஊன் அளிக்கும் இவ்வுடல் விட நாள் இதோ?" என, வான்
கோன் அளிக்கும்இக் கொள்கையில் தான் மயல் கொண்டான். |
"நான்
காக்கும் இந்நாட்டில் வேறொருவன் வந்து, பெருமை தரும்
இவ்வாட்சியுரிமையை அவனுக்கு நானே தந்து, அவனை நானே வணங்க
வேண்டுமோ? என் வளமெல்லாம் பதமழிந்து, ஊனைப் பேணிக்காக்கும்
இவ்வுடலையும் இழந்து விடும் நாள் இதுவோ?" என்று, வானுலகரசனாகிய
இறைவன் இம்மண்ணுலகை மீட்டுக் காத்தலாகிய இக்கொள்கை பிடிபடாமல்
எரோதன் மயக்கங்கொண்டான்.
மான் - மானம் : பெருமை.
| 10 |
விட்பு
லந்தகை வேய்ந்தது தான்வினை வேய்ந்தான்
மட்பு லங்குறை மறந்தது தானுயிர் மறந்தா
னுட்பு லந்தழ லுண்டது தானுண வுண்ணான்
கட்பு லந்துயில் கடிந்தது தான்கொலு கடிந்தான் |
| |
விண் புலம் தகை
வேய்ந்தது; தான் வினை வேய்ந்தான்.
மண் புலம் குறை மறந்தது; தான் உயிர் மறந்தான்
உள் புலம் தழல் உண்டது; தான் உணவு உண்ணான்.
கண் புலம் துயில் கடிந்தது; தான் கொலு கடிந்தான். |
ஆண்டவன்
அவதாரச் சிறப்பினால் விண்ணுலகம் பெருமை
அணிந்தது; எரோதனோ தீவினையை அணிந்து கொண்டான். மண்ணுலகம்
தன் குறையெல்லாம் மறந்தது; தானோ தன் உயிரை எண்ணவும் மறந்தான்.
அவனது உள்ளமோ நெருப்பை உண்டது; தான் உணவும் உண்ணான்.
அவனது கண்தூக்கத்தை விலக்கியது; தானும் கொலுவீற்றிருந்தலை
விலக்கினான்.
|