ஒன்று. முதலில் செய்யும் சேற்று உழவின்போது உதிர்க்கப்பட்ட மணிகள், பின்னர்ச் சால் உழவின்போது வெளித்தோன்றுவதும் இயல்பாமென்க. விருந்து எல்லாம் திருந்து மனைகளின், மேல் இடம் எல்லாம் அகிற்றூபம் என்க. எக்காலத்தும் விருந்து ஒம்பத்தகுவதாம் என்பது இல்லற நீதி. "செல்விருந்த தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்" - குறள். மேல் எல்லாம் தூபம் - கீழே புகைத்த தூபம் மேனோக்கிச் சென்று மேலிடங்களிற் பரவுமாதலின் மேல் எல்லாம் என்றார். உள்ளன என்ற வினைமுற்றுக்கள் தொக்கன. 66 - 78 முதலியவை பார்க்க. காலெலாம் - பாலெலாம் - சாலெலாம் - மேலெலாம் - என்பனவும் பாடங்கள். 4 1270. | கடைஞர்மிடை வயற்குறைத்த கரும்புகுறை பொழிகொழுஞ்சா றிடைதொடுத்த தேன்கிழிய விழிந்தொழுகு நீத்தமுடன் புடைபரந்து ஞிமிறொலிப்பப் புதுப்புனல்போன் மடையுடைப்ப உடைமடையக் கரும்படுகட் டியினடைப்ப வூர்கடொறும். |
5 (இ-ள்.) வெளிப்படை. ஊர்களிலெல்லாம் மள்ளர்கள் தம்மால் குறைக்கப் (வெட்டப்) படுதலால் வயல்களில் வெட்டப்பட்ட நெருங்கிய கரும்புகள் பொழிகின்ற சாறு, அக்கரும்புகளின் இடையிலே கட்டப்பட்டிருந்த தேன்கூடுகள் கிழிதலால் ஒழுகுகின்ற தேனின் பெருக்கினூடே கூடிப் பக்கங்களிற் பரவி, வண்டுகள் மொய்த்துச் சத்திக்கப், புது வெள்ளிநீர்போல மடையை உடைக்கவே, அவ்வாறு உடைபட்ட மடைகளை அந்தக் கரும்புச்சாற்றிற் காய்ச்சப்பட்ட வெல்லக் கட்டிகளால் அடைப்பார்கள். (வி-ரை.) ஊர்கள் தொறும் - கொழுஞ்சாறு - நீத்தமுடன் - பரந்து - மடை உடைப்ப - உடை மடை .கட்டியின் அடைப்ப - என்று கூட்டி உரைத்துக் கொள்க. வயற் குறைத்த மிடை கரும்பு என்க. மிடைதல் - உள்ளிடத்து மக்கள் நுழையக் கூடாதபடி நெருக்கமாகப் பயிராதல். இது கரும்புப் பயிரின் இயல்பு. குறைபொழி - குறைக்கப்பட்டதனாற் பொழியும். குறைக்கப்பட்டதனால் என்பது திரிந்து நின்றது. குறை - பெயர்ச்சொல் எனக்கொண்டு, குறைக்கப்பட்ட கரும்பு குறையினாற் பொழி தேன் என்று கூட்டித் - துண்டு - என்று உரை கூறுவாருமுண்டு. கொழுஞ்சாறு - கொழுமை - நாட்டு நிலவளமும், ஆற்று வண்டலாற் பெறும் எருவளமும், ஆற்று நீர்வளமும் கூடியதால் உளதாவது. இவ்வாறு சாற்றின் பெருக்கு நிகழ்வதனைக் "கரும்பெல்லாங் கண்பொழி தேன்" என முன்பாட்டிற் றொடங்கிக் காட்டியது காண்க. இடைதொடுத்த தேன் - நெருங்கி வளரும் பயிராதலாலும், இன்சாறு நிறைதலாலும் அதனுள்ளே பல இடத்தும் சிறு தேன்கூடுகள் கட்டப்படுவதியல்பு. "கோற்றேனு மிகமுறித்து" (793), "கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகுங், காவாறு வயற்கரும்பின் கமழ்சாறூர்" (866) என்ற விடங்களி லுரைத்தவை இங்கு நினைவு கூர்தற்பாலன. தேன் - சிறு தேன் கூடுகள். கிழிய - கிழிதலால். காரணப்பொருளில் வந்த வினையெச்சம். ஒழுகு நீத்தம் - வழிந்து மெல்லப்பெருகு மியல்புக்கேற்ற சொல்லாட்சி. இதுபோலவே கொழுஞ்சாறு என்றது பெரும் பெருக்குக் குறித்ததும் காண்க. |