பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்13

 

படர்ந்து ஏறும் நிலைமையது - மேலிருந்து கீழே ஒடுதலும், சமனாய் நிற்றலுமன்றி நீர் மேலேறிச்செல்லும் தன்மையதன்று. ஆயினும் இங்கு ஆற்றுநீர் பெருக்கினாலும் காற்றுந்த அலைபட்டெழுதலாலும், அணிமையில் உள்ள சோலைத்துறையில் மெல்லச் சென்றேறும் தன்மையதாம் என்றார். படர்ந்து - கொழுந்து என்ற தற்கேற்பப் படர்ந்து என்றார். கொடிகளின் கொழுந்து படர்ந்து மேலேறிச் செல்லும் தன்மை கருதுக. படர்ந்து என்றதனால் குறைந்த வேகத்துடன் பரவிச் செல்லுதல் குறிக்கப்பட்டது. கடற்கரை - குளக்கரை - ஆற்றின் கரை ஒரங்களில் அலைகள் பரவி - மேல் ஏறும் காட்சி இங்கு நினைவுகூர்தற்பாலது. நீர்க் கொழுந்து - சாதியொருமை.

இப்பாட்டால் நிலவளமும் நீர்வளமும் பொருந்தப்பெற்ற சிறப்புக் கூறினார். முன்னர் "எவ்வுலகும் வனப்பு எண்ண" (1268) என்ற கருத்தை விரித்துக் காட்டியபடி.

துறையாற்ற மணிசொரிய - என்பதும் பாடம்.

7

1273.

மருமேவு மலர்மேய மாகடலி னுட்படியும்
உருமேக மெனமண்டி யுகைத்தகருங் கன்றுபோல்
வருமேனிச் செங்கண்வரால் மடிமுட்டப் பால்சொரியும்
கருமேதி தனைக்கொண்டு கரைபுரள்வ திரைவாவி.

8

(இ-ள்.) வெளிப்படை. கரிய கடலினுள் படியும் உருவுடைய மேகங்கள் போல மணம்பொருந்திய மலர்களை மேய்வதற்காகக் கரிய எருமைகள் உள்ளேபுக, நெருங்கிக், கரிய கன்றுகள்போல வரும் பெருவண்ணமும் செங்கண்ணுமுடைய வரால்மீன்கள் மடியில் முட்டியதனால் பாலினைச் சொரியும் கரிய எருமைகளால் வாவிகள் அலையுடன் கரையிற் புரள்வன.

(வி-ரை.) "பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில்" (திருவேகம்பரந்தாதி - 81) என்ற பட்டினத்து அடிகளது திருவாக்கின் விரிவுரைபோன்றது இத்திருப்பாட்டு.

மேய - மண்டி - ழட்ட சொரியும் - மேதி என்று கூட்டுக. மேதி மலர் மேய்வதற்கு மண்டுகின்றன; அப்போது வெருக்கொண்டு வரால்கள் உகைத்து அவற்றின் மடிகளில் முட்டுகின்றன; அதனால் கன்று முட்டியன என்று மடிசுரந்து மேதி பால் சொரிகின்றன; அத்தகைய கருமேதிகளினால் அலையுடன் வாவி கரைபுரள்வன என்பதாம்.

மேதிமரு மேவுமலர் மேய என்றதனால் சுவையறிந்துண்ணும் அவற்றினுடைய நாகரிக வாழ்வு குறிக்கப்பட்டது. "கருமேதி செந்தா மரைமேயுங் கழனிக் கானாட்டு முள்ளூர்" (கொல் - கௌ - 2) என்றது நம்பிகள் திருவாக்கு. "தேமாவின் காவி னறுங்குளிர் நீழ லுறங்குவ கார்மேதி" (927) என்றதும் ஆண்டுரைத் தவையும் பார்க்க.

கன்றுபோல் சொரியும் - இதனால் வரால்கள் எருமைக்கன்று போலக் கொழுத்து வளர்ந்துள்ள செழுமையும் அவைதாம் வாழும் நீரினுட் படிந்த பொருள்களைத் தாக்கி மேற்சென்று இடிக்கும் தொழிலும், தாயின் மடியில் முட்டிப் பாலுண்ணும் கன்றின் தன்மையும், கன்று மடிமுட்டும்போது பால் சுரக்கும் தாய்மேதியின் வாத்சல்யம் என்னும் அன்பின் றிறமும், உண்மையில் இங்குக் கன்று முட்டாது கன்றுபோலப் பருத்த வரால்களே முட்டினவாயினும், கன்று முட்டியனவாகத் தமது மந்த மதியினால்மேதி அறிந்துகொண்ட எண்ணமே அன்பின் றிறத்தை விளைக்க அது பால்சுரக்கக் காரணமாயிருந்த நிலையும் கருதிக்காண நிற்கும் தன்மையணிச் சுவை கண்டுகளிக்கத் தக்கது. "கன்றுமுட்டி யுண்ணச் சுரந்த காலி" (ஆரூர்) நம்பிகள்.