பெரியபுராணம் செம்மை - செம்பொருள். "செம்பொருளால்" (348) என்ற விடத்துரைத்தவையும், பிறவும் பார்க்க. செம்மை - நித்தமாய்த் தூயதாய் விகாரமின்றி ஒரே பெற்றியாயுள்ள இறைவன் தன்மை. அஃதாகு பெயராய்த் தன் குணியாகிய சிவத்தை உணர்த்திற்று. செம்மையாக் கொண்ட என்பது சிறந்த பற்றுக் கோடாகப் பிடித்துக்கொண்ட என்ற பொருளில் வந்தது. செம்மை - உறுதியின் வழுவாத திண்மையை உணர்த்திக், கொள்ளுதலை விசேடித்து நின்றது. "நிற்ப தொத்து நிலையிலா நெஞ்சந் தன்னு ணிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற, கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்" (திருத்தாண்டகம்) என்ற அவர்தந் திருவாக்கும், "உன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே" என்ற திருவாசகக் கருத்தும் காண்க. திருநாவுக்கரையன் - இப்பெயர் நாயனார்க்கு அவரது "செந்தமிழின் சொல்வளம்" பற்றி இறைவனால் அளிக்கப்பட்ட காரணப்பெயர். "அருளாற் பாவுற் றலர்செந் தமிழின் சொல்வளப் பதிகத் தொடை பாடிய பான்மையினால்"(திருநா - புரா - 74) என்றும், "கோதின் மொழிக் கொற்றவனார்" (அப்பூதி - புரா - 12) என்றும் இதனை விரி நூல் விரித்தது. இச்சிறப்பினையே "நாவுக்கரசெனும்", "நாவுக்கரையர் பிரான்ற னருந்தமிழே" என்று (திருத்தொண்டர் திருவந்தாதி) வகை நூலும் வகுத்துக் காட்டிற்று. இங்குச் செம்மை - செம்பொருள் - சிவனது தன்மை என்னும் பொருளதாதல் "சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மையுளதே?" (பொது - பியந்தைக்காந்தாரம் - 1) என்ற நாயனார்தந் திருவாக்கினாலும் அறிக. திருநின்ற செம்மை என்ற அவர்தந் திருவாக்கின் ஆட்சி முதனூலுள் இங்கு எடுத்துப் போற்றப்பட்டதும், அதுவே அவரது தொண்டின் உறைப்பாகிய உறுதியெனச் சரிதநிலை காட்டப்பெற்றதும் காண்க. "பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர், மறப்பன்கொ லோவென்றெ னுள்ளங் கிடந்து மறுகடுமே",திரு மாலொடு நான்முகனுந் தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே, தேடிக் கண்டு கொண்டேன்", "நாடி நான்முகன் நாரண னென்றிவர் தேடியுந்திரிந் துங்காண வல்லரோ? மாட மாளிகை சூழ்நிலை யம்பலத், தாடி பாதமென் னெஞ்சு ளிருக்கவே", "சேவடிக் கீழ்ச்சென்றங், கிறுமாந் திருப்பன் கொலோ" என்பன முதலாக நாயனாரது திருவாக்குக்கள் செம்மையையே செம்மையாக்கொண்ட நிலையை விளக்குவன. அடியார்க்கு மடியேன் - அவர்க்கு அடிமை செய்யும் தகுதியில்லேனாதலின் அவரது அடியார்க்கு அடிமை செய்வேன்; அதுவே போதியதாய் எனக்குச் செம்மை பயப்பிக்கும் என்றபடியாம். "தொண்டர் தொண்டர்க்குத் தொழும்பாய்த் திரிரத் தொடங்கினனே" (கோயினான் - 38) என்றும், "அடியா ரடியா ரடியார்க் கடிமைக், கடியனாய் நல்கிட்டடிமையும் பூண்டேன், அடியா ரருளா லவனடி கூட, வடியா னிவனென் றடிமை கொண்டானே" (திருமந் - 8 - தந் - 503) என்றும் "கழற் கொண் சேவடி காணலுற் றர்தமைப் பேணலுற்றார், நிழற்கண்ட போழ்தத்து நில்லாவினை" (இரட்டை - மாலை - 11- அம்மையார்) என்றும் வருவனவாதிய திரவாக்குக்கள் என்ற திருவிருத்தமும் (ஆரூர்) காண்க. திருநாவுக்கரசர்பாற் றொண்டு பூண்டு அத்திறத்தாலே செம்மை பெற்றுய்ந்த அப்பூதி நாயனாரைத் துதிக்குமிடத்தே "ஒருநம்பி யப்பூதி யடியார்குக் மடியேன்" என்று இக்கருத்தையே பின்னர் வற்புறுத்தியதும் காண்க. வகை :- (24) நல்ல தவமுடையவர்; திருநல்லூரில் சிவபெருமான் திருவடிகளைத் தமது தலையின்மேற் சூட்டப்பெற்றவர்; மற்று இந்தப் பிறவியைப் போக்கும் பொருட்டுத் திருவதிகை வீரட்டானேசுவரருடைய வீரக்கழலை |