பக்கம் எண் :


சிறப்புப் பாயிரம் 3

 

யணிந்த பாதங்களை முன்னமே அடைந்தவர்; பகைவர்கள் விடத்தைக் கொடுக்க அதனையே ஒள்ளிய திருவமுதாக உண்டவர்; திருவாமூரில் அவதரித்த திருநாவுக்கரசர் என்ற பெயரினைச் சூட்டப்பெற்ற தூய மணிபோல்வார்.

ஆமூரின் நாவுக்கரசெனும் தூமணியே நற்றவன் என்று பூட்டுவீற் பொருள் கோளாகக் கூட்டி உரைத்துக்கொள்க. தூமணியே நற்றவன் - பெற்றவன் - உற்றவன் - துற்றவன் என்று முடிக்க. நற்றவன் என்பதனைத் "திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டி னெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர்" (1266) என்று விரிநூல் விரித்துரைத்தது. நல்லூர்ச் சிவன்...பெற்றவன் - இதனை 1459 - 1460 பாட்டுக்களிலும், வீரட்டர்...உற்றவன் - என்றதனை 1326 முதல் 1342 வரை உள்ள திருப்பாட்டுக்களிலும், அடையார் விடமிட அமுதாத் துற்றவன் என்றதனை 1367 முதல் 1370 வரை திருப்பாட்டுக்களிலும், விரிநூல் விரித்து உரைத்தது.

நாவுக்கரசு எனும் - இறைவனார் திருவாக்கால் "திருநாவுக்கரசு" என்று பெயர் சூட்டப்பெறும். 1339 திருப்பாட்டுப் பார்க்க. துற்றவன் - உண்டவர். விடம் ஒள் அமுதா - விடத்தினை விடமென்று அறிந்தும் அதுவே அடியார்க்கு அமுதாகும் என உண்டவர் என்க. அடையார் - பகைவர். இங்கு அமணர். "திருந்தா அமணர்" - "வல்லமண் குண்டர்" என்பனவாதிய நாயனார் திருவாக்குக்கள் காண்க. ஆமூர் - திருவாமூர். நாயனார் அவதரித்த வூர். 1277 பார்க்க.

(25) திருநாவுக்கரசர் பெருமானுடைய அருந்தமிழே, மணியாயும் பெரிய திருமறைக்காட்டில் விளங்க வீற்றிக்கும் மருந்தாயும் உள்ள சிவபெருமானைப், போற்றிய மறைபோன்ற வளப்பமுடைய தமிழனால் வலிமையுள்ள நீண்ட கதவத்தினைத் திறக்கச் செய்தன; தெள்ளிய கடலினகத்தே தம்மைப் பிணிக்கப்பட்ட தாகிய கல்லை மிதக்கச் செய்தன; சைவமாகிய பெருநெறிக்கு அணிமையுடையன - அணி செய்வன.

முன்பாட்டில் தூமணியே நற்றவன் - பெற்றவன் - உற்றவன் - துற்றவன் எனக் கூட்டிமுடிக்க வைத்தருளியதுபோல, இப்பாட்டிலும் அருந்தமிழே - திறப்பித்தன - மிதப்பித்தன - அணியன என்று கூட்டி முடிக்கவைத்த நயம் காண்க. மணியினை - மருந்தினை - கதவம் - திறப்பித்தன - என வைத்த பிறவினை முடிபு நாயனாரது "கதவம் திறப்பிம்மினே" என்ற இத்தேவாரச் சொல்லாட்சியையும் பொருள் முடிபையும் சரித நிகழ்சசியையும் போற்றிக் காட்டுவதாம். திணியன - நீள் - என்ற அடைமொழிகள் மறைகளாற் பூசிக்கப்பட்டுத் திருக்காப்பிடப்பட்ட அன்று முதல் நாயனாரது தமிழாற் றிறக்கப்பட்ட நாள்வரை அடைக்கப்பட்டிருந்த வலிமை குறித்தன. "திண்ண மாக்கத வின்வலி நீக்குமே" என்ற தேவாரம் காண்க. திணியனவாகிய என்க. பிணியன - திருமேனியைச் சேர்த்துப் பிணைத்ததாகிய. ஒருமைப் பன்மை மயக்கம். "கற்றுணைப் பூட்டி" என்பது தேவாரம்.

மிதப்பித்தன - மிதக்கச் செய்தன. வினைமுற்று.

அணியன - அணிமையைச் செய்வன - தருவன. "தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே யேற்றுந் தகையன" (இன்னம்பர் - திருவிரு - 7), "ஏணிப் படி நெறி யிட்டுக் கொடுப்பன" (13), "விடாத தொண்டர்க் கணியன" (திருவையாறு - திருவிரு - 3), "பித்தரா மடியார்க்கு முத்தி காட்டும், ஏணியை யிடர்க் கடலுட் சுழிக்கப்பட்டிங் கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்கும், தோணியை" (திருவாவடுதுறை - தாண்ட - 4) என்பனவாதி தேவாரங்கள் இங்கு நினைவுகூர்தற்பாலன.

முன்பாட்டினால் நாயனாரது சிறப்பும், இப்பாட்டால் அவரது திருவாக்கின் சிறப்பும் போற்றப்பட்டன. திருநாவுக்கரையர் என்ற பெயரின் காரணப் பொருளே நம்பியாண்டார் நம்பிகளின் திருவுள்ளத்தின் முன்னிற்பதாயிற்று,