நாயனாரது சிறப்புப் பெயரும் அடிமைத்திறத்தின் உறைப்புடைமையாகிய செம்மை நெறியும் முதனூல் பேசிற்று. அப்பெயரினை விளக்குமுகத்தால் ஊரும் பெயரும் சரிதமும் திருத்தொண்டின் வகையும் அருட்கவித்திறமும் வகை நூல் பல படியாய் வகுத்தது. இவை விரிந்தபடி விரிநூலுட் கண்டுகொள்க. திருமறைக் காட்டிற் கதவந்திறப்பித்த வரலாறு 1530 - 1535 பாட்டுக்களிலும், கடலிற் கல் மிதப்பித்த வரலாறு 1390 - 1393 பாட்டுக்களிலும் காண்க. 1266. (இ-ள்.) திருநாவுக்கரசு - திருநாவுக்கரசர் எனவும்; வளர் திருத்தொண்டின்...வாகீசர் - சிவபெருமானது திருத்தொண்டினது வளர்தற்கேது வாகிய நெறியில் நின்று உலகம் வாழ்வடையும் பொருட்டு வரும் ஞானத்தவ முனிவராகிய வாகீசர் எனவும்; வாய்மை திகழ்...உறுகின்றேன் - வாய்மை விளங்குதற்கேதுவாகிய பெருமையுடைய திருப்பெயரின் சிறப்புக்களைத் (அவர் தம் சரிதம் கூறும் வகையால்) துதிக்கின்றேன்; பேருலகில்...உணராதேன் - பெரிய உலகின்கண் அதனை உரைப்பதற்கு ஒரு நாவினுக்கும் இயலாமையை உணர்கிலேன். (வி-ரை.) திருநாவுக்கரசு - வாகீசர் - என்னும் பெருநாமம் என்க. தொகை நூலும் வகை நூலும் இத்திருப்பெயைரைப்பற்றியே சிறப்புக் கூறிப் போந்தமையால் அதனைப் பின்பற்றியே சரிதம் கூறப்புகுந்த ஆசிரியரும், அப்பெயரின் சிறப்பினையே யானும் துதிக்கப் புகுகின்றேன் என்று தொடங்குகின்றார். இப்புராணத்தினுட் கூறுவன அத்திருப்பெயரின் சிறப்புக்களே. பெருநாமச்சீர் என்ற கருத்துமது. திருநாவுக்கரசு என்பது இப்பிறப்பில் இறைவனாற் சூட்டப்பெற்ற திருப்பெயர். வாகீசர் - முன் பிறவியில் அவரது திருப்பெயராகும் என்பது வரலாறு. இவ்வரலாற்றினைப் பிற்காலத்தாராற் புனைந்துரைக்கப்பட்டதொரு பொய்க்கதை என்று கண்டு ஒதுக்கும் புதிய ஆராய்ச்சியாளருமுண்டு. ஆனால் திருநாவுக்கரசர்க்கு முன் பிறப்பு ஒன்றிருந்தது என்பதும், அதில் அவர் தவஞ் செய்யும் ஒரு முனிவரா யிருந்தனர் என்பதும், அந்தத் தவம் சிவத்தை அடைய முயலும் சிவஞானத் தவமாமென்பதும் மறுக்கற்பாலனவல்ல. ஞானத்தவம் - ஞானத்தாற் சிவத்தை யடைதற்குரிய தவம். "சைவத் திறத்தடைவ ரிதிற் சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்" (8 -11) "முன்மார்க்க ஞழனத்தாலெய்து முத்தி முடிவென்பர்" (8 - 18) "ஞானப்பெருமை யுடையோர் சிவனைப் பெறுவர் காணே" (8 - 23), "மேலான ஞானத்தால் அரனை யருச்சிப்பர் வீடெய்த வறிந்தோ ரெல்லாம்" (8 - 22) எனவரும் சிவஞான சித்தியார்த் திருவாக்குக்களும், "ஞானத்தா லுனை நானுந் தொழுவனே" என்ற அப்பர் தேவாரமும் காண்க. "உன்னுடன் பிறந்தான் முன்னமே முனியாகி யெமையடையத் தவமுயன்றான்" (1313), "பண்டு புரி நற்றவத்துப் பழுதினள விறைவழுவும், தொண்டர்" (1314) என்று வருவனவற்றால் நாயனார் முன்னைப் பிறப்பில் சிவனை அடைய நல்ல தவம் புரிந்த முனிவரர் என்பதும், அத்தவத்தில் சிறிது வழுவினர் என்பதும் ஐயமின்றிப் பெறப்படும். "நில்லாத நிணக்குரம்பைப் பிணக்க நீங்க நிறைதவத்தை யடி யேற்கு நிறைவித் தென்றும், செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானை" (திருச்செங்காட்டங்குடி - 8 ) என்ற திருத்தாண்டகத்தின் அகச்சான்று கொண்டும் அவை ஐயமின்றித் துணியப்படும். வரும் ஞானத் தவமுனிவர் என்றதில் வரும் என்றதும் இக்கருத்துக்களை வலியுறுத்துகின்றது. வாகீசர் என்றது முற்பிறப்பிற் கொண்ட பெயராயும் திருநாவுக்கரசு என்றது அப்பொருளேபட இப்பிறப்பிற் கொண்ட பெயராயும் உள்ள வேற்றுமை கருதியே ஒரு பொருள்படும் இரண்டு பெயர்களை இங்கு ஆசிரியர் கூறினார் என்பதும் பொருந்தும். முன்பிறப்பில் நாயனார் சிவஞான நெறிநின்ற ஒருமுனிவராவார். |