| செந்நின் றபரம் பொருளா னவர்தந் திருவா ரருள்பெற் றசிறப் புடையோர் முன்னின் றதெருட் சிமருட் சியினான் முதல்வன் கருணைக் கடன்மூழ் கினரே. |
71 (இ-ள்.) வயிறுற்றடு....பிணிதான் - வயிற்றினிடத்துத் தங்கி வருத்திய கடிய சூலைதானும்; மன்னும்.....பின் - நிலைபெறும் அத்திருப்பதிகத்தைப் பாடி யருளிய பின்பு, அந்நின்ற....அகன்றிடலும் - அந்த நிலையில்; அக்கணமே நீங்கவும்; செந்நின்ற....சிறப்புடையோர் - செம்மைநின்ற பரம்பொருளாகிய சிவபெருமானுடைய திருநிறைந்த அருளினைக் கைகூடிய சிறப்பினையுடைய நாயனார்; முன் நின்ற....மூழ்கினரே - மூண்டு நின்ற ஞானமயக்கத்தால் முதல்வரது கருணையாகிய கடலினுள்ளே மூழ்கியே நின்றார். (வி-ரை.) மன்னும் - என்றும் நிலைபெற்றிருக்கும். "நீடிய கோதில்" (1335) என்றது காண்க. மறப்பிணி - மறக்கருணையினால் விளைந்த பிணி. தான் - உயர்வு சிறப்பும்மை தொக்கது. அந்நின்ற நிலைக்கண் - அந்த நிலையின்கண்ணே - அவ்விடத்து அப்பொழுதே. "இந்நின்ற நிலையே", "அந்நின்ற நிலை" (965) என்றவாறு காண்க. நிலைக்கண் - நிலைக்கணின்றம் என்று ஐந்தனுருபு விரித்து அவ்வாறு வேதனை செய்து - நின்ற நிலையினின்றும் நீங்கவும் என்றுரைப்பார் ஆறுமுகத் தம்பிரானார். உயிரோடு அருள் தந்தது எனா - இது அவ்வாறு நீங்கிய சூலையினைப் பற்றி நாயனார் நினைந்தது. சூலை என்ற எழுவாய் வருவிக்க. சூலை நீங்காது நின்றிருப்பின் உயிர் நீங்கியிருக்குமாதலின் உயிர்தந்ததென்றும், மருளினீங்கி அருள்பெறுதற்கேதுவாயின்மையின் அருள்தந்ததென்றும், மருளினீங்கி அருளுக்கேதுவாகாது வேறு வகையால் நீங்கி வெற்றுயிர் மட்டும் தந்திருக்குமாயின் பயனற்ற பாழ் வாழ்வாகுமாதலின் உயிரோடு அருள் தந்ததென்றும் கூறினார். செந்நின்ற பரம்பொருள் - செம்மையுள் நிற்கும் பொருள். பரம்பொருள் - உலகுக்குப் பரமாகிய மேற்பட்ட பொருள். செம்மை - செம்பொருள் என்பன சிவத்தின் தன்மை என வருவனவும், செம்பொருள் என்பதற்கு முதற்பொருள் எனப் பரிமேலழகர் உரைத்ததுவும், 1052ல் உரைத்தனவும் காண்க. செந்நின்ற - என்பதற்கு அன்புடையா ருள்ளத்தே செவ்வே நின்ற என்றும், செந்நின்ற பரம்பொருளானவர் தம் - என்பதற்குப் பரத்துவம் ஆராயுமிடத்துப் பிரம விட்டுணுக்களை போற் சாயாது நேரேநின்ற எனினும் பொருந்தும் என்றும் உரைப்பர் இராமநாதச் செட்டியார். திருஆர் அருள் திரு - முத்தித்திரு. "திருநின்ற செம்மையே" என்ற திருத்தொண்டத் தொகைப் பொருளை இங்கு வைத்துக் காண்க. திருவாரருள் பெற்ற சிறப்புடையோர் - "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரசர்" என்ற கருத்து. முன் நின்ற தெருட்சி மருட்சி - முன்நின்ற - ஞானக்கண்முன் தோன்றிய. தெருட்சி - அறிந்தனுபவிக்கும் மிக்க ஆனந்தம். அதிசயம் என்பர். "அதிசயம் கண்டாமே" என்பது திருவாசகம். மருட்சி - இங்கு ஆனந்த மேலீட்டினால் அதன் வயப்பட்டு வேறொன்றும் தோன்றாதிருக்கும் அறிவின்நிலை குறித்தது. ஈண்டு மருட்சி - மயக்கம் - என்பது உயர்வின்கண் வந்தது. ஆணவத்தோ டத்துவிதமாகிய மயக்கம் போலன்றி, ஈண்டுத், தாணுவினோ டத்துவிதமாகிய நிலை என்க. கருணைக் கடல் மூழ்குதல் - பேரருளிலே திளைத்தல். உருவகம். |