பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்91

 

எண்ணும் தோறும் கண்ணீர் பொழிய நிற்பர். பெரியோர். "பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தா யன்றே! இத்தனையு மெம்பரமோ?" என்பது திருத்தாண்டகம். இதுபற்றியே தகுமோ? என்றார்.

புவிமீது புரளுதலும் அயர்தலும் ஆனந்த மேலீட்டினால் நிகழும் மெய்ப்பாடுகள். அருளின் நிறைவு உள்ளே அடங்காமையால் வீழ்தலும் புரளுதலும் அயர்தலும் நிகழ்ந்தன. முன்னர் நோய்மிகுதியால் இவை நிகழ்ந்தன. அதுபோலவே இங்கு அருணிறைவாலுமாயின என்க. "புரண்டு வீழ்ந்து" - (நம்பிகள்).

அயர்வார் - முற்றெச்சம். அயர்வார் - மொழிவார் - என்று கூட்டுக. இவற்றைத் தொழுதார் என்ற மேல்வரும் பாட்டுடன் முடிக்க.

இங்கென்.....பிழைப்பதனால்.....தகுமோ? எனது பெரும்பிழையினால் தேவரீர் இது செய்தருளுதலும் தகுமோ?; இவ்வருள் எனக்கும் தகுமா?; நான் இது பெறத் தகுதியுடையவனா? அல்லேன் என்றபடி. பிழைப்பு - பிழை.

ஏறாத பெருந்திடர் ஏறிட....பெருவெள்ளமிட - நான் விழ்ந்து கிடந்தது புறச்சமயமாகிய சமணம் என்னும் அநத் ஆழ்ந்தபடுகுழி. அதினின்றும் மேலே உள்ள ஏற முடியாத பெருந்திடராகிய சைவ உயர்நிலை எறுதற்குப் பெருவெள்ள மிட்டு, வெள்ள நீர் மேலேற ஏற அதனுடன் யானும் மேலே ஏறிவரும்படி அருளினீர் என்க. இதற்கு இவ்வாறன்றி நீர் எறிப்பாயாத பெருந்திடரினும் நீர்பாயும்படி என்று பொருள் உரைப்பாருமுண்டு. அது பொருந்தாமை யறிக. ஏறிட - நான் ஏறும்படியாக. ஏற்றிட - என்று பாடங்
கொள்வாருமுண்டு.

ஆழ்குழி என முன்னர்க் கூறியது ஏறாதபெருந்திடர் என்ற கருத்துக்கிசையு மாறும் அறிக. திடரினும் ஏற - உயர்வு சிறப்பும்மை தொக்கது. தங்கும் - ஏனைய வெள்ளங்கள்போல வற்றாது நிலைபெற்ற. பந்த முத்தி யிரண்டினு நீங்காதிருத்தலாற் றங்கும் என்றார் என்பர் ஆறுமுகத் தம்பிரானார்.

இன்னை - இவைபோல்வன பல துதிகளையும். மொழிவார் - முற்றெச்சம்.

72

1338.(வி-ரை.) பொய்வாய்மை பெருக்கிய - பொய்யினையே மெய்ம்மையாகக் கூறி அவஞ்செய்து பரப்பிய. "பொய்யினால் மெய்யையாக்கப் புகுந்த நீர் போமின்" (திருஞான - புரா - 792).

பொய் வாய்மை - அசத்தியம் என்பாருமுண்டு. சமணர்களது மந்திரம் அத்திநாத்தி - உண்டு - இல்லை; பொய்யும் - மெய்யும் என்ற இரண்டு சொற்களையுடையது. அன்றியும், பொருள்களை வினாவியவழி உண்டாம் - இல்லையாம் - உண்டுமில்லையாம் - என மூவகை என்றலும், இம்மூன்றனோடும் சொல்லவொண்ணாததாம் என்றதனைச் சேர்த்தும், அதனைத் தனியாக வைத்தும் ஆக ஏழுவகை என்றலும், சமணர் மரபு. "அத்தகு பொரு ளுண்டு மில்லையு மென்று நின்ற" என்ற தேவாரமும் காண்க. "தெளியா தொருபொருளே பொய்யு மெய்யு மாமென்னும் பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்" (நமிநந்தி - புரா - 10) என்ற கருத்துங் காண்க.

புன் சமயம் - புன்மைச் செயலும் ஒழுக்கமும் எண்ணங்களுமுடைய சமயம்.

பொறி - இங்கு அறிவு குறித்தது. "புத்தரோடு பொறியில் சமணும்" (திருஞான - தேவா). பொறை. என்பது பாடமாயின் பொறுமையில்லாத என்க. பொறுமையாவது பிற சமயங்களையும் பொறுத்திருத்தல். பிற சமயங்களை மாறுபட்டு அழித்தல் சமணர்களது சமயக் கொள்கைகளுள் ஒன்றென்பது நாயனார் சரித நிகழ்ச்சிகளாலும், ஆளுடைய பிள்ளையார், தண்டியடிகள் முதலியோர் புராணங்களாலும், நீலகேசி முதலிய சமயவாத நூல்களாலும் அறியப்படும் உண்மை.