பக்கம் எண் :


92திருத்தொண்டர் புராணம்

 

சமண் நீசர் - நீசர் - கொல்லாமை மேற்கொண்ட சமயமென்று சொல்லிக் கொலைசெய்யத் தூண்டுபவர் என்ற பொருள்தந்து நின்றது. "கொலையும் பொய்ம்மையும் இலமென்று கொடுந்தொழில் புரிவோர்" (1346), "கையிற் றுற்றுணும் நீசர்" '(பழந்தக்கராகம் - மாற்பேறு -10 - பிள்ளையார் தேவாரம்) முதலியவை காண்க.

புறத்துறை - புறச்சமயம். அவ்வாழ்குழி - உள்வீழ்ந்தார் மீண்டு மேலேறமாட்டாது செய்தலின் குழி என்றார். அகரம் புறத்துறையாகும் அந்த என முன்னறி சுட்டு.

ஆழ்குழி - உருவகம்.

ஆறியாது மயங்கி அவம் புரிவேன் - நன்மை தீமையறியும் அறிவிலாது மயக்கத்தினால் அவத்தினை - தீமையினைச் - செய்தேனாயினும், தாமே செய்யாது சேர்க்கைக் கேட்டினாலே தீச்செயல் செய்தாரும் தக்கன் யாகத்திற் றண்டிக்கப்பட்டது போல நானும் தண்டிக்கப்படுதற்குரியேன். புரிவேன் - புரிவேனையும், அத்தகைய என்னையும் என இழிவு சிறப்பும்மை தொக்கது.

புரிவேனையும் கழல்வந்தடையும் இவ்வாழ்வு பெறத் தரு சூலை என்று சூலையின் பேருதவியைப் போற்றினபடி. அவ்வாழ்குழி - இவ்வாழ்வுபெற - அகரம் - இகரம் ஆகிய தேய்மை அணிமைச் சுட்டுக்கள் மிக மிக விலகி நின்ற நெடுந்தூரத்தையும், மிக மிக அணுகத்தந்த அணிமையையும் சுட்டின. "இங்குநின் றங்குவந் தத்துணையும் பகர்ந்த" என்னும் திருக்கோவையாருங் காண்க.

மைவாச நறும் குழல் - இயற்கை மணமுடைய கூந்தல் என்றபடி. சாதியடை என்றலுமாம்; "புற்றரவக் கச்சார்த்த" என்பது போல. மாமலையாள் - பார்வதியம்மையார். "பெருமலை பயந்த கொடி" (திருஞான - புரா - 42.)

மாமலையாள் மணவாளன் - அருள்மேனி கொண்டு எனக்கும் அருளைத்தந்தவன் என்பது குறிப்பு.

வந்துஅடையும் - வந்து புறச்சமயப் படுகுழியினின்றும் ஏறிப்போந்து வந்து.

எதிர்செய்குறை - எதிராக - கைம்மாறாகச் - செய்யும் உபகாரம். குறை - நன்றி.

தொழுதார் - இறைவ னருளாய் வந்ததாதலின் தொழுதற்குரியதாயிற்று.

தொழுவார் - என்பதும் பாடம்

73

1339.

 மேவுற் றவிவ்வே லையினீ டியசீர்
         வீரட் டமமர்ந் தபிரா னருளாற்
"பாவுற் றலர்செந் தமிழின் சொல்வளப்
         பதிகத் தொடைபா டியபான் மையினால்
 நாவுக் கரசென் றுலகே ழினுநின்
         னன்னா மநயப் புறநண் ணுக"வென்
 றியாவர்க் கும்வியப் புறமஞ் சுறைவா
         னிடையே யொருவாய் மையெழுந் ததுவே.

74

(இ-ள்.) வெளிப்படை. பொருந்திய இந்தச் சமயத்தில் சிறப்பினால் நீடிய திருவீரட்டானேசுவரருடைய திருவருளால் "பாட்டுக்கு இசைந்து அலர்ந்த செந்தமிழுடைய இனிய சொல்வளம் பொருந்திய திருப்பதிகத் தொடையைப் பாடியருளிய முறைமையினால், திருநாவுக்கரசு என்று உனது நல்ல பெயர் விருப்பமுற ஏழுலகங்களிலும் பொருந்துவதாக" என்று யாவர்க்கும் வியப்பு உண்டாகும்படி, மேகந்தவழும் ஆகயத்தினிடமாக ஒரு அசரீரி வாக்கு எழுந்தது.