பக்கம் எண் :

திருவேங்கடமாலை477

87.சாரு மருவிதவழ் சார லுஞ்செஞ் சந்தனத்தின்
வேரு மரவமறா வேங்கடமே - நேரு
மதுகையிட வர்க்கறுத்தார் மாமலரோன் சாப
மதுகையிட வர்க்கறுத்தார் வாழ்வு.

(இ - ள்.) சாரும் அருவி தவழ் சாரலும் - பொருந்திய நீரருவிகள் பெருகப்பெற்ற மலைப்பக்கங்களும், அரவம் அறா - ஓசை நீங்காதிருக்கப் பெற்ற: செம் சந்தனத்தின் வேரும் - செந்நிறமான சந்தனமரங்களின் வேரும், அரவம் அறா - பாம்புகள் நீங்காதிருக்கப்பெற்ற: வேங்கடமே -,- நேரும் - எதிர்த்த, மது கையிடவர் - மது கைடபன் என்னும் அசுரர்களை, கறுத்தார் - கோபித்து அழித்தவரும், மா மலரோன் சாபம் - சிறந்த (திரு நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனது சாபத்தை, மதுகை இடவர்க்கு அறுத்தார் - வலிமையுள்ள ருஷபத்தையுடையவராகிய சிவபிரானுக்கு நீக்கினவருமான திருமால், வாழ்வு - வாழுமிடம்; (எ - று.)

அரவம் - ஒலியென்னும் பொருளில், ரவம் என்ற வட சொல்லின்விகாரம், மதுகைடப ரென்பவர், ஆதிசிருஷ்டிகாலத்தில் தோன்றினவர். மகா பலசாலிகளான இவ்வசுரரிருவரும் செருக்கிக் கடலில் இழிந்து திருமாலை யெதிர்த்துப் பெரும்போர்புரிய, இவர்களை அப்பெருமான் துடையால் இடுக்கிக் கீழேதள்ளிக் கால்களால் மிதித்துத் துவைத்து வதைத்தனனென வரலாறு உணர்க.

மதுகைடபர் என்ற வடமொழித்தொடர், யமகநயத்திற்காக மதுகையி டவரென விகாரப்பட்டது. இத்தொடர், உயர்திணையும்மைத்தொகையாத லால், பன்மைவிகுதிபெற்றது. மதுகைடவர்க்கறுத்தார் - உயர்திணைப் பெயரின்முன் வலிமிக்கது, இரண்டாம்வேற்றுமைத்தொகை யாதலால்; "இயல்பின் விகாரம்." கரு என்ற பண்படி கறுஎன விகாரப்பட்டு வினைத்தன்மை யடையும்போது கோபித்தலென்னும் பொருளையும் உணர்த்துதலை "கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள" என்ற தொல்காப்பியத்தால் அறிக.

மலரோன்சாபம் இடவர்க்கு அறுத்தார் - பிரமனிட்டசாபத்தாற் கையை விட்டு நீங்காமல் ஒட்டிக்கொண்ட பிரமகபாலத்தை யேந்திச் சிவபிரான் உலகமெங்கும் அலைந்து இரத்தலைத் திருமால் தவிர்த்தருளினன். (திருக் கண்டியூரில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலின் திருநாமம், "அரன்சாபந்தீர் த்த பெருமாள்" என வழங்கும். "பிண்டியார் மண்டையேந்திப் பிறர்மனை திரிதந்துண்ணு, முண்டியான் சாபந்தீர்த்த வொருவன்" என்றார் திருமங்கை யாழ்வாரும்.) சாபம் மதுகை - சாப வலிமையை, இடவர்க்கு அறுத்தார் என்றலும் ஒன்று. இனி, மலரோன்சாபமது - அந்தப்பிரமனது சாபத்தை, இடவர்க்கு - சிவனுக்கு, கை - கையினின்று, அறுத்தார் - தவிர்த்தவர் என்று உரைப்பாருமுளர். "மாமரையோன்" என்றும், "மாமறையோன்" என்றும் பாடங்க ளுண்டு. சாபம் - வடசொல். ருஷபம் என்ற வடசொல், இடப மென விகாரப்பட்டது; அதனையுடையவர், இடவ ரென்க.

(87)