பக்கம் எண் :

திருவேங்கடமாலை487

னொற்று இரட்டிற்று. வேடு - சாதிப்பெயர். வேடர்கள் குடிசைகளில் அடிக்கடி மணம் நிகழ்கின்றன வென்க. மகராலயம் என்ற வடசொல் - மகர ஆலயம் என்று பிரிந்து, மகரங்களுக்கு இடமான தென்று பொருள்படும்; மகரம் - சுறாமீன். கடல் கடந்தது, இராமாவதாரத்தில் இலங்கைக்குச் செல்லுதற்பொருட்டு. வசுதேவர் - கண்ணனைப்பெற்ற தந்தை. மகர் - மகன் என்பதன் உயர்வுப்பன்மை. ஆலயங்கள்தந்தார் - பலவிடங்களிற் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்து சேதநர்க்குச் சேவைசாதிப்பவர்.

(100)

ஆதிதிரு வேங்கடமென் றாயிரம்பே ரானிடமென்
றோதிய வெண்பா வொருநூறுங் - கோதில்
குணவாள பட்டரிரு கோகனகத் தாள்சேர்
மணவாள தாசன்றன் வாக்கு.

(இ - ள்.) ஆதி திருவேங்கடம் என்று - சிறப்புள்ள திருவேங்கடமென் றும், ஆயிரம் பேரான் இடம் என்று - ஆயிரந்திருநாமங்களை யுடையவனான திருமாலினது இடமென்றும், ஓதிய - சொன்ன, வெண்பா ஒரு நூறும் - நூறு வெண்பாக்களும், - கோது இல் - குற்றமில்லாத, குணம் ஆள - நற்குணங்களை யுடையவரான, பட்டர் - பராசரபட்ட ரென்னும் ஆசாரிய ருடைய, இரு கோகனகம் தாள் - தாமரைமலர்போன்ற இரண்டு திருவடிகளை, சேர் - சரணமாக அடைந்த, மணவாளதாசன்தன் - அழகியமணவாள தாசனுடைய, வாக்கு - வாய்மொழியாம்; (எ - று.)

"ஆதிதிருவேங்கடம்" என்றது - இந்நூற் செய்யுள்களின் முன்னிரண் டடியின் வாய்பாட்டையும், "ஆயிரம்பேரா னிடம்" என்றது - பின்னிரண் டடியின் வாய்பாட்டையுங் குறிக்கும். குணவாளர் + பட்டர் = குணவாள பட்டர்; உயர்திணைப் பெயரீறு கெட்டது. கோகநதம் என்ற வடசொல் - சக்கரவாகப் பறவைகள் தன்னிடம் விளையாடப் பெறுவ தென்று காரணப் பொருள்படும்; கோகம் - சக்கரவாகம். தாசன்றன், தன் - சாரியை.

இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப்பிறன்போலும் பதிகங்கூறியது; பிரயோகவிவேகநூலார், "இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது", "வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார்," "இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப் பின்னாகப் பதிகங்கூறுவதும் காண்க" என்றவை காண்க.திருவேங்கடமாலை முற்றிற்று.