ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி. "திரு" என்னும் பலபொருளொருசொல் - வடமொழியிலே "ஸ்ரீ" என் பதுபோல, தமிழிலே தேவர்கள் அடியார்கள் ஞானநூல்கள் மந்திரங்கள் புண்ணிய ஸ்தலங்கள் புண்ணியதீர்த்தங்கள் முதலிய மேன்மையையுடைய பலபொருள்கட்கும் விசேஷணபதமாகி, அவற்றிற்குமுன்னே மகிமைப் பொருளைக் காட்டிநிற்கும்; ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்ரீபக்திசாரர் ஸ்ரீராமாயணம் ஸ்ரீஅஷ்டாக்ஷரம் ஸ்ரீரங்கம் ஸ்ரீகைரவிணி ஸ்ரீபாதம் எனவும், திருமால் திருமழிசைப்பிரான் திருவாய்மொழி திருவெட்டெழுத்து திருவரங்கம் திரு வல்லிக்கேணி திருவடி எனவும் வழங்குமாற்றால் அறிக. இது, வேங்கடத் துக்கு அடைமொழி; அந்தாதிக்கு அடைமொழியாகவுமாம். வேங்கடம் என்பது - திருமாலின் திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் ஒன்றும், வடநாட்டுத்திருப்பதிகள் பன்னிரண்டனுள் முதலதும், "கோயில் திருமலை பெருமாள்கோயில்" என்று சிறப்பாக எடுத்துக்கூறப்படுகிற மூன்று தலங்களுள் இடையது மாகிய தலம். தன்னையடைந்தவர்களுடைய பாவ மனைத்தையும் ஒழிப்பதனால், "வேங்கடம்" எனப் பெயர்பெற்றது; வடசொல். வேம் - பாவம், கடம் - எரித்தல் எனப் பொருள் காண்க. (இதனை "அத்திருமலைக்குச் சீரார் வேங்கடாசல மெனும்பேர், வைத்தன ரதுவேதென்னில் வேமெனவழங்கெழுத்தே, கொத்துறுபவத்தைக் கூறும் கடவெனக்கூ றிரண்டாஞ், சுத்தவக்கரங் கொளுத்தப்படு மெனச் சொல்வர் மேலோர்", "வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திடச்செய்வதால் நல், மங்கலம் பொருந் துஞ் சீர்வேங்கடமலையான தென்று" என்னும் புராணச் செய்யுள்களாலும் அறிக.) ஸ்ரீசைலத்தின் மேற்கிலுள்ள நந்தனபுர மென்னும் ஊரில் புரந்தரனென்னும் பிராமணோத்தமனது குமாரனாகிய மாதவ னென்பவன் தன்மனைவியாகிய சந்திரரேகையென்பவளோடு பூஞ்சோலை யிற்சென்று விளையாடிக்கொண்டிருக்கையில் மாலினியென்பாளொரு சண்டாளகன்னிகையின் கட்டழகைக் கண்டு காமுற்று அவளோடு சேர்ந்து மனையாளைத்துறந்து அப்புலைமங்கையுடனேசென்று புலால்நுகர்ந்தும் கட் குடித்தும் கைப்பொருள்முழுவதையும் இழந்து பின்பு வழிபறித்தல் உயிர்க் கொலை முதலிய கொடுந்தொழில்புரிந்து பொருள்சேர்த்து அவட்குக்கொ டுத்துவந்து முடிவில் வறியவனாகிப் பலநோய்களையும்அடைந்து அவளால் அகற்றப்பட்டவனாய்ப் பலபாவமுந்தொடரப் பித்தன்போல அலைந்து திரிந்து இத்திருமலையை அடைந்த மாத்திரத்தில் தனது தீவினையெல்லாம் சாம்ப லாகப் பெற்று முன்னைய பிரமதேஜசைப்பொருந்தி நல்லறிவுகொண்டு திரு மாலைச்சேவித்து வழிபட்டுப் பரமபதமடைந்தன னாதலால் இதற்கு "வேங் கடாசலம்" என்னும் பெயர் நிகழ்ந்தது என்று வடமொழியில் ப்ரஹ்மாண்ட புராணத்திலும் பவிஷ்யோத்தர புராணத்திலும் கூறப்படுதல் காண்க. அன்றி, "வேம் என்பது - அழிவின்மை, கடம் என்பது - ஐசுவரியம்; அழிவில்லாத ஐசுவரியங்களைத் (தன்னையடைந்தார்க்குத்) தருதலால் வேங்கட மெனப் பெயர்கொண்டது" என்று வராகபுராணத்திற் சொல்லப்பட்ட வாறும்உணர்க. |