திருஎன்பதற்கு - மேன்மையான என்று பொருள்கொண்டால் திரு வேங்கடம்என்ற தொடர் பண்புத்தொகையும், மேன்மையையுடைய என்று பொருள்கொண்டால் இரண்டாம்வேற்றுமை யுருபும்பயனுமுடன் தொக்க தொகையுமாம். வேங்கடத்தந்தாதி என்ற தொடர் - வேங்கடத்தினது சம்பந்தமான அந்தாதி யென்று விரித்து வேங்கடத்தின்விஷயமாக அந்தா தித்தொடையாற்பாடப்பட்ட தொருநூலென்று பொருள்கொண்டு ஆறாம் வேற்றுமைத்தொகையாகவும், வேங்கடத்தைப்பற்றிய அந்தாதியென்று விரித்துப் பொருள்கொண்டு இரண்டாம்வேற்றுமையுருபும் பொருளுந்தொக்க தொகையாகவும் உரைக்கத்தக்கது. வேங்கடத்தந்தாதி யென்ற தொடரில் அத்துச்சாரியையின் முதல் அகரம் மவ்வீறுஒற்றழிந்துநின்ற அகரத்தின்முன் கெட்டது. அத்துச்சாரியையின் ஈற்றுஉகரம் உயிர்வர ஓடிற்று. அந்தாதி - அந்தத்தை ஆதியாக வுடையது: அன்மொழித்தொகை; வடமொழித்தொடர், தீர்க்கசந்தி: அந்த ஆதி எனப் பிரிக்க. அந்தாதியாவது - முன்நின்றசெய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்துவருஞ்செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது; இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச்செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்த லெனப்படும். இது, தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாம். பதிற்றந்தாதி நூற்றந்தாதி என்ற வகைகளில் இந்நூல் நூற்றந்தாதியாம். அதாவது - நூறுவெண் பாவினாலேனும் நூறுகட்டளைக்கலித்துறையினாலேனும் அந்தாதித்தொடையாற் கூறுவது. இந்நூல், அந்தாதித்தொடையா லமைந்த நூறு கட்டளைக் கலித்துறைகளையுடையது. சொற்றொடர்நிலைச்செய்யுள், பொருட்டொடர் நிலைச்செய்யுள் என்ற வகையில் இது சொற்றொடர்நிலை; "செய்யுளந்தாதி சொற்றொடர்நிலையே" என்றார் தண்டியலங்காரத்தும். எனவே, திருவேங்கடத்தைப்பற்றிப் பாடியதொரு பிரபந்த மென்பது பொருள்; திருவேங்கடத்தில் எழுந்தருளி யிருக்கின்றவரும் ஸ்ரீநிவாஸன் என்று வடமொழியிலும் அலர்மேல் மங்கையுறைமார்பன் என்று தென் மொழியிலும் திருநாமங் கூறப்படுபவருமான எம்பெருமானைக் குறித்துப் பாடியதொரு நூலென்பது கருத்து. ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் "விருந்தேதானும், புது வதுகிளந்த யாப்பின்மேற்றே" என்பதனால், "விருந்துதானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத்தாம் வேண்டியவாற்றால் தொடுக்கப்படுந் தொடர் நிலைமேலது" என்று கூறினமையின், இந்நூல், அங்ஙனங்கூறிய விருந்தாம் என்று உணர்க. அச்சூத்திரவுரையில் அந்தாதியும் கலம்பகமும் முதலாயின உதாரணங் காட்டப்பட்டுள்ளவாறுங் காண்க. இனி, இதனைச் சிறுகாப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார். இப்பிரபந்தம், தோத்திரரூபமானது. இந்நூலிலுள்ள கலித்துறைகள் யாவும் பெரும்பாலும் திரிபு என்னுஞ் சொல்லணியையும், சிறுபான்மை யமகம் என்னுஞ் சொல்லணியையும் உடையன. திரிபாவது - ஒவ்வோரடியிலும் முதலெழுத்து மாத்திரம் வேறு |