பக்கம் எண் :

அழகரந்தாதி613

ஸ்ரீ

அழகரந்தாதி.

அழகரது அந்தாதி என விரியும்; அழகர் விஷயமாக அந்தாதித்தொடையாற் பாடப்பட்டதொரு பிரபந்த மென்பது பொருள். இத்தொடர்மொழியில் தொக்குநின்ற ஆறாம்வேற்றுமையுருபின் பொருளாகிய சம்பந்தம், விஷயமாகவுடைமை; விஷ்ணுபுராணம், விநாயகரகவல் என்பவற்றிற்போல. அழகரைப்பற்றிய அந்தாதியென விரித்தால், இரண்டாம்வேற்றுமையுருபும் பொருளுமுடன் தொக்கதொகையாம்.

"அழகர்" என்பது - திருமாலின் திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் பாண்டியநாட்டுத்திருப்பதி பதினெட்டில் ஒன்றும், வநகிரி யென்று வட மொழியிற்கூறப்படுவதும், 'கோயில் திருமலை பெருமாள்கோயில் அழகர்திருமலை' என்று சிறப்பாக எடுத்துக்கூறப்படுகிற நான்கு தலங்களுள் ஒன்றும், "இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும், பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர்" என்றபடி ஆன்றோர் கொண்டாடப்பெற்ற மகிமையுடையதுமான திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானது திருநாமம்; ஸர்வாங்கஸுந்தரரென்னும்படி நிரம்பிய அழகையுடையவராதல்பற்றி வந்தது இப்பெயர். அலங்காரர், சுந்தரபாகு என்றும் அப்பெருமானுக்குத் திருப்பெயர்கள் வழங்கும்.

அந்தாதி - அந்தத்தை ஆதியாக வுடையது: அன்மொழித்தொகை; வடமொழித்தொடர், தீர்க்கசந்தி: அந்த ஆதி எனப் பிரிக்க. அந்தாதியாவது - முன்நின்றசெய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்துவருஞ்செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது; இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச்செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்த லெனப்படும். இது, தொண்ணூற்றாறுவகைப்பிரபந்தங்களுள் ஒன்றாம். பதிற்றந்தாதி நூற்றந்தாதி என்ற வகைகளில் இந்நூல் நூற்றந்தாதியாம். அதாவது - நூறுவெண் பாவினாலேனும் நூறுகட்டளைக்கலித்துறையினாலேனும் அந்தாதித்தொடை யாற் கூறுவது. இந்நூல், அந்தாதித்தொடையா லமைந்த நூறு கட்டளைக் கலித்துறைகளை யுடையது. சொற்றொடர்நிலைச்செய்யுள், பொருட்டொடர் நிலைச்செய்யுள் என்ற வகையில் இது சொற்றொடர்நிலை; "செய்யுளந்தாதி சொற்றொடர்நிலையே" என்றார் தண்டியலங்காரத்தும்.

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் "விருந்தேதானும், புதுவதுகிளந்த யாப்பின்மேற்றே" என்பதனால், "விருந்துதானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் தொடுக்கப்படுந் தொடர்நிலைமேலது" என்று கூறினமையின், இந்நூல், அங்ஙனங்கூறிய விருந்