பக்கம் எண் :

614அழகரந்தாதி

தாம் என்று உணர்க அச்சூத்திரவுரையில் அந்தாதியும் கலம்பகமும் முதலாயின உதாரணங்காட்டப்பட்டுள்ளவாறுங் காண்க. இனி, இதனைச்சிறுகா ப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார். இப்பிரபந்தம், தோத்திரரூபமானது.

இந்நூலிலுள்ள கலித்துறைகள் யாவும் பெரும்பாலும் திரிபு என்னுஞ் சொல்லணியையும், சிறுபான்மை யமகம் என்னுஞ் சொல்லணியையும் உடையன. திரிபாவது - ஒவ்வோரடியிலும் முதலெழுத்துமாத்திரம் வேறு பட்டிருக்க. இரண்டுமுதலிய பல எழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறு படுவது; இதனையும் யமகவகையில் அடக்குவர் ஒருசாரார். யமகமாவது - பலஅடிகளிலாயினும் ஓரடியிற்பலஇடங்களிலாயினும் வந்த எழுத்துத் தொடர்களே மீண்டுவந்து பொருள்வேறுபடுவது; இது, தமிழில் 'மடக்கு' எனப்படும். இந்நூற்செய்யுள்களிற் சிறுபான்மை காணப்படுகிற யமகங்கள், பலஅடிகளில் வந்தவை.

சிறப்புப்பாயிரம்.

திருகவிமங்கைமணவாளவள்ளல்செந்தேன் றுளித்து
முருகவிழ்தென்றிருமாலிருஞ்சோலைமலைமுகுந்தற்
கிருகவின்றாள்களிற்சூடுமந்தாதியினீரைம்பதி
லொருகவிகற்கினுஞானமும்வீடுமுதவிடுமே.

(இதன்பொருள்.) திரு கவி - சிறந்த கவியாகிய, மங்கை மணவாள வள்ளல்-திருமங்கைநாட்டில்திருவவதரித்த அழகியமணவாள தாசரென்னும் வண்மைக்குணமுடையவர், செம் தேன் துளித்து முருகு அவிழ் தென் திரு மாலிருஞ்சோலை மலை முகந்தற்கு - செந்நிறமானதேன்சிந்தி வாசனைவீசப் பெற்ற அழகிய திருமாலிருஞ்சோலைமலையில் திருக்கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கிற திருமாலுக்கு, கவின் இரு தாள்களில் சூடும் - அழகிய இரண்டுதிருவடிகளிலே சாத்திய, அந்தாதியின் - இந்த அழகரந்தாதி யென்னும் பிரபந்தமாகிய பாமாலையி லுள்ள, ஈரைம்பதில் - நூறுசெய்யுள்களுள், ஒரு கவி - ஒருசெய்யுளை, கற்கினும் - கற்றாலும், (அக்கற்றவர்க்கு அக்கல்வியானது), ஞானமும் வீடும் உதவிடும் - நல்லுணர்வையும் பரமபதத்தையும் தவறாதுகொடுக்கும்; (என்றவாறு.) - ஈற்றுஏகாரம் - தேற்றம்.

அழகியமணவாளதாசர் இயற்றிய திருமாலிருஞ்சோலைமலை யழகரந்தாதிப்பாசுரங்களுள் ஒன்றை யோதியுணர்ந்தவரும் ஞானமுடையராய் ஸ்ரீவைகுண்டஞ்சேர்வர் என இந் நூற்பயன் கூறுமுகத்தால், இந்நூலின் சிறப்பையும் இந்நூலாசிரியரது தெய்வப்புலமையையும் தெரிவித்தவாறாம். சிறப்புப் பாயிரவிலக்கணங்களுள் ஆக்கியோன்பெயரும், நூற்பெயரும், நுதலியபொருளும், பயனும் இச்செய்யுளில் விளங்குதல் காண்க.

திரு கவி - திவ்வியகவி யென்றபடி, திரு - மேன்மை. கவி ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் என்னும் நாற்கவிகளைப் பாடுபவன். பொதுவிதிப்படி திருக்கவியென வலிமிகற்பாலது எதுகைநயம்நோக்கி "திருகவி" என இயல்பாய்