பக்கம் எண் :

870நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி

இதுவரையிற் கூறிவந்த திருப்பதிகள் மயர்வறமதிநலம்அருளப் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாஸனம்செய்யப்பட்டு மிகவும்ஏற்றம்பெற்றன. இவைகளன்றி, முனிவர்முதலியோரால் ப்ரதிஷ்டைசெய்யப்பட்டு ஏற்றம்பெற்ற புராணஸ்தலங்களும், ஆழ்வாராசாரியர்களின் திருவவதாரம் முதலியசம்பந்தங்களினால் ஏற்றம்பெற்ற தலங்களும், உண்டு அவையாவன:-

1. திருநாராயணபுரம் - செல்வப்பிள்ளை' எழுந்தருளிய தலம். ஸ்ரீபாஷ்ய காரர், திருநாராயணன் செல்வப்பிள்ளை என்ற இவர்கட்குச் சந்நிதி முதலியன நிர்மாணம்செய்து செல்வப்பிள்ளையை எழுந்தருளப் பண்ணி உத்ஸவாதிகளையெல்லாம் நடப்பித்தருளினர். நாராயணா த்ரியென்றும், வேதாத்ரியென்றும், யாதவாத்ரியென்றும், யதிசைலமென்றும் மறுபெயர்களையுடைய பிரசித்தமான தலம் இதுவே. இது மேல்நாட்டி லுள்ளது.

2. ராஜமன்னார் கோயில் - ராஜகோபாலன் எழுந்தருளிய தலம்.

3. ஜநார்த்தநம் - ஜநார்த்தநப்பெருமாள் எழுந்தருளிய தலம்; இப்பெருமான் தமது கையிற்கொண்டுள்ள நீரை யுகமுடிவில் ஆசமநஞ் செய்வரென்பர்; இது, மேலைக்கடற்கரையி லுள்ளது.

4. ஸ்ரீழமுஷ்ணம் - ஆதிவராகப்பெருமாள் எழுந்தருளியதலம். இது, எட்டு ஸ்வயம்வ்யக்தஸ்தலங்களில் ஒன்று. சோழநாட்டி லுள்ளது.

5. புஷ்கரம் - தீர்த்தஸ்வரூபியாகிய எம்பெருமான் எழுந்தருளிய தலம். இது, ஸ்வயம்வ்யக்தஸ்தலங்களில் ஒன்று.

6. ஜகந்நாதம் - ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி எழுந்தருளிய தலம். புருஷோத்தமம் என்னும் மறுபெயருடையது. வடநாட்டி லுள்ளது.

7. ஸ்ரீகூர்மம் - ஸ்ரீவராகப்பெருமாள் எழுந்தருளிய தலம்.

8. சிங்கப்பெருமாள்கோயில் - இது, தொண்டைநாட்டிலுள்ளது; நரசிங்க மூர்த்தி எழுந்தருளியுள்ள தலம்.

9. அவந்தி - கண்ணன் எழுந்தருளிய தலம். உஜ்ஜயினி என்னும் மறுபெய ருடையது. இது, முத்திதரும்நகரங்கள் ஏழனுள் ஒன்று.

10. கயா - பல்குனி நதிக்கரையி லுள்ளது. சிராத்தபிண்டம் போடும்படி யான விஷ்ணுபாதத்தை யுடையது.

11. ப்ரயாகை - மாதவப்பெருமாள் ஆலிலையில் பள்ளிகொண்டுள்ள தலம் அலகபாத் என்னும் மறுபெயருடையது.

12. மயிலாப்பூர் - இது, முதலாழ்வார்கள் மூவரில் பேயாழ்வார் திருவவதரித்த தலம்.

13. திருமழிசை - திருமழிசையாழ்வார் திருவவதரித்த தலம். மஹீஸாரக்ஷேத்ரம் என்னும் மறுபெய ருடையது.

14. திருவஞ்சிக்களம் - குலசேகராழ்வார் திருவவதரித்த தலம். மலை நாட்டி லுள்ளது.

15. திருமண்டங்குடி - தொண்டரடிப்பொடியாழ்வார் திருவவதரித்த தலம்.

16. திருக்குறையலூர் - திருமங்கையாழ்வார் திருவவதரித்த தலம்.

17. காட்டுமன்னார்கோவில் - ஸ்ரீமந்நாதமுனிகளும் ஸ்ரீஆளவந்தாரும் திருவவதரித்த தலம்.

18. பூவிருந்தவல்லி - திருக்கச்சிநம்பிகள் திருவவதரித்த தலம்.

19. ஸ்ரீபெரும்பூதூர் - ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதரித்த தலம். இவர்க்குப் பெரிய நம்பிகள் தவயம் உபதேசம்செய்த தலம் - ஸ்ரீ மதுராந்தகம்.

20. கூரம் - கூரத்தாழ்வான் திருவவதரித்த தலம்.

21. மழலைமங்கலம் - எம்பார் திருவவதரித்த தலம்.

22. பச்சைப்பெருமாள்கோயில் - முதலியாண்டான் திருவவதரித்த தலம்.

மற்றும் பல வுள.