ஸ்ரீ அஷ்டபிரபந்தத்தி லடங்கிய புராணகதைகள். கஜேந்திரனைப் பாதுகாத்த கதை:- இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்கவிஷ்ணுபக்தியுடையனாய் ஒருநாள் விஷ்ணுபூசைசெய்கையில் அகஸ்தியமகாமுனிவன் அவனிடம்எழுந்தருள, அப்பொழுது அவன் தன்கருத்து முழுவதையும் திருமாலைப் பூசிப்பதிற் செலுத்தியிருந்ததனால், அவ்விருடியின் வருகையை அறிந்திடானாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அம்முனிவன் தன்னை அரசன் அலட்சியஞ்செய்தா னென்று கருதிக் கோபித்து "நீ யானைபோலச் செருக்குற்றிருந்ததனால், யானையாகக் கடவை' என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒருகாட்டில் யானையாகத் தோன்றினனாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மகிமையால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந்தாமரைமலர்களைக் கொண்டு திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில், ஒருநாள், பெரியதொரு தாமரைத்தடாகத்தில் அருச்சனைக்காகப் பூப்பறித்தற்குப் போய் இறங்கினபொழுது, அங்கே முன்பு நீர்நிலையில்நின்று தவஞ்செய்துகொண்டிருந்த தேவலனென்னும் முனிவனது காலைப் பற்றியிழுத்து அதனாற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற் பெரியமுதலையாய்க்கிடந்த ஹூஹூஎன்னுங் கந்தருவன் அவ்வானையின் காலைக் கௌவிக்கொள்ள, அதனை விடுவித்துக்கொள்ள முடியாமல் கஜேந்திரன் ஆதிமூலமேயென்று கூவியழைக்க, உடனே திருமால் கருடாரூடனாய் அங்குஎழுந்தருளித் தனதுசக்கரத்தைப் பிரயோகித்து முதலையைத்துணித்து யானையை அதன்வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருள்செய்தனன் என்பதாம். கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது எம்பெருமானல்லாத பிறதேவரெல்லோரும் தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதியொழிய, அதற்கு உரிய திருமால் தானே வந்து அருள்செய்தன னென நூல்கள் கூறும், ஒரு விலங்கினாலே மற்றொருவிலங்குக்கு நேர்ந்த துன்பத்தைத் தான் இருந்தவிடத்திலிருந்தே தீர்ப்பது சர்வசக்தனான எம்பெருமானுக்கு மிகவும் எளியதாயினும் அப்பெருமான் அங்ஙனஞ்செய்யாமல் தனதுபேரருளினால் அரைகுலையத் தலைகுலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகாகுணத்தில் ஈடுபட்டு, அதனைப் பாராட்டிக்கூறுவர். இவ்வரலாற்றில், திருமாலே பரம்பொருளாந்தன்மை வெளியாம். ஹம்ஸாவதார கதை:- முன்னொருகாலத்தில் மது கைடப ரென்ற அசுரர்கள் பிரமதேவனிடத்திலிருந்து வேதங்களை அபகரித்துக்கொண்டு |