பக்கம் எண் :


சரித்திர ஆராய்ச்சிக் குறிப்புக்கள்767

 

பிற்சேர்க்கை

அப்பர் சுவாமிகளது

சரித்திர ஆராய்ச்சிக் குறிப்புக்கள்

[சென்னை இந்துமத சொத்துப் பரிபாலன சபை கனம் அங்கத்தினர்

சைவத் திருவாளர் - இராவ்பகதூர் - C. M. இராமச்சந்திரஞ் செட்டியார்

B.A., B.L., F.R.G.S. அவர்கள் எழுதி அன்புடனுதவியது.]

காலக் குறிப்பு

திருத்தொண்டர் புராணத்தில் அப்பர் சுவாமிகளுடைய வயதுகுறிக்கப்படாமலிருந்த போதிலும் அவர் முதிர்ந்த வயதினரென அறிகிறோம். சமயாசாரியார்களின் வயதை அறிவிக்கும் ஒரு வெண்பாவின்படி அவருக்கு எண்பத்தொரு ஆண்டுகள் உலக வாழ்வாகும். திருஞான சம்பந்தருக்கோ பதினாறு வயது எனக் குறிக்கப்பட்டிருக்கின்றது. இருவரும் ஒரு காலத்தவர்கள் என்பது உறுதியாகின்றபடியால் அப்பர் சுவாமிகளின் இறுதிக் காலத்தில் சம்பந்தர் இருந்திருக்க வேண்டும். இவ்விரு பெருமக்களுடைய வாக்குக்களில் இருந்தாவது, இவர்களுடைய சரித்திரங்களைக் கூறும் சேக்கிழார் பெருமான் வாக்கிலிருந்தாவது, இவர்கள் காலத்திலிருந்த அரசர்களது வழங்கிய பேர்களோ, அவர்களது காலவரையறையோ கண்டுபிடிக்க இயலாது. திருஞானசம்பந்தர் காலத்துப் பாண்டியன் கூன்பாண்டியனெனவும், பின்னர் அவரே, நின்றசீர் நெடுமாறர் என்ற பெயரைக் கொண்டார் எனவும் அறிகின்றோம். இதைத் தவிர வேறு அரசர்களுடைய பெயர்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆகவே கல்வெட்டுக்கள் முதலிய புறச்சான்றுகளைக் கொண்டுதான் இவர்களது காலத்தை யறியவேண்டியிருக்கிது.

கால ஆராய்ச்சியில் முதன் முதலில் ஈடுப்பட்ட ஆசிரியர் P. சுந்தரம் பிள்ளையவர்கள் திருஞானசம்பந்தரைத் திராவிட சிசு என்று சங்கரர் தமது சௌந்தரிய லகரியில் குறிப்பிட்டதாலும், காஞ்சியில் கி. பி. 550-ல் இராஜசிம்மப் பல்லவன் கட்டிய கைலாசநாதர் ஆலயத்தைப்பற்றி அப்பர் பாடியிருத்தலாலும், சளுக்கிய அரசன் புலிகேசியினுடைய தலைநகராகிய வாதாபி நகரத்தைப் பல்லவ அரசனது படைத்தலைவரான பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர் துகளாக்கியததைச் சேக்கிழார் எடுத்துக் கூறியதாலும் இவ்விரு பெருமக்களுடைய காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியுமென ஆராய்ந்திருக்கிறார்கள். இவ்வாராய்ச்சியையும் பின்னர்ப் பல புலவர்கள் செய்த ஆராய்ச்சியினையும் துணைக்கொண்டு அப்பர் சுவாமிகள் கி. பி. 574க்கும் 655க்குமிடையில் வாழ்ந்திருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது.

சமண ஆதிக்கம்

பல்லவர்களுடைய வம்சாவளியிலிருந்து மகேந்திரவர்ம அரசன் 600 முதல் 625 வரை அரசாண்டான் என்பதும், அவன் மகன் நரசிம்மவர்மன் 625 முதல் 660-க்குப் பிந்தியும் ஆண்டான் என்பதும் அறியப்படுகின்றன. 640-ல் இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங் என்ற சீன யாத்திரிகன், தான் பல்லவர்களது தலைநகரான காஞ்சியில் சில நாள்தங்கியிருந்தான் என்றும், அங்கே புத்தர்களுடைய பள்ளிகள் நூற்றுக்குமேல் இருந்தனவென்றும், பௌத்த சமண சன்னியாசிகள்