பக்கம் எண் :


768திருத்தொண்டர் புராணம்

 

ஆயிரக்கணக்கில் இருந்தார்களென்றும் எழுதியிருக்கிறான். அவன் காஞ்சிக்கு வருவதற்குமுன் கானோச் நகரத்தில் அரசாண்ட ஸ்ரீஹர்ஷனிடமிருந்து வந்தான். அதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பாஹியான் என்ற சீன யாத்திரிகன் காலத்தில் பௌத்த சமண மதங்கள் மேலும் சிறந்திருந்தன. அப்பர், திருஞானசம்பந்தர் இவர்களது பிரசாரத்தினால் அம்மதங்களின் செல்வாக்குக் குறைந்துவிட்டது என்பது சரித்திரங்களால் அறியப்படும் உண்மை.

பல்லவர்; குணபர வீச்சரம்

அப்பரால் சைவ சமயத்திற்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்ட அரசன் திருவதிகையில் குணபரவீச்சரம் என்னும் சிவாலயத்தைக் கட்டினதாகப் பெரிய புராணம் கூறுகிறது. அவ்வாலயத்தின் பெயர் குணபரேசுரம். குணபரேச்சரம் என்பதுமாம். குணபரன் என்ற பெயர் மகேந்திரவர்மப் பல்லவனுடைய ஒரு சிறப்புப் பெயர். இவ்வரசனே திருச்சிராப்பள்ளி மலைக்குகை மண்டபத்தைக் குடைந்தெடுப்பித்தவன். இவன் காலத்துக் கல்வெட்டு ஒன்று அந்தக் குகை மண்டபத்தில் ஒரு தூணில் அடியிற்கண்டபடி (திருச்சிராப் பள்ளி கோயிலில்) காணப்படுகிறது.

குணபர நாமாணி ராஜன்யனேன லிங்கேன லிங்கினிக் ஞானம்
ப்ரததாஞ் சிராய லோகே விபக்ஷங்ருத்தே பரர்வருத்தம்

இவ்வடமொழி சுலோகத்தின் பொருளாவது "இலிங்கத்தை வழிபடும் குணபரன் என்னும் பெயரோடு கூடிய அரசன் இந்த இலிங்கத்தினால் (பெற்ற) விபக்ஷ விருத்திலியிலிருந்து திரும்பிய ஞானம் உலகத்தில் நீண்டகாலம் நிலை நிற்பதாக" என்பதாம். இதில் கண்ட விபக்ஷ விருத்தி என்பது சமண மதமாகும். ஆகவே குணபரன் என்ற அரசன் சமணனாயிருந்து அதைவீட்டுச் சைவனானதை இது குறிக்கிறது. இந்த, மதமாற்றமானது அப்பர் சுவாமிகள் காரணமாக அவ்வரசனுக்குக் கிடைத்தது. இந்தக் கல்வெட்டு அப்பரது ஜீவ காலத்திலேயே ஏற்பட்டதென்பதைக் கவனிக்க வேண்டும். மற்றொரு தூணிலும் ஒரு கல்வெட்டு அதே குணபரனைக் குறிக்கிறது. இவை இரண்டும் தென்னிந்திய சாசனங்கள் என்ற அரசாங்க வெளியீடு புஸ்தகம் பக்கம் 29-30-ல் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சுலோகங்களினால் இவ்வரசன் திருச்சிக்கோட்டையில் ஒரு சிவாலயம் கட்டி அதில் ஒரு லிங்கமும் தன் உருவச்சிலையும் வைத்திருந்ததாகக் கண்டிருக்கிறது. மேலும் அந்தக் குணபரன்தான் மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன் என்று செங்கற்பட்டுச்சில்லா வல்லத்தில் உள்ள ஒரு குகைக்கோயில் சாசனத்தினால் தெரிகிறது. அக்கல்வெட்டு இது :-

"பகாப்பிடுகு லளிதாங்குரன் சத்துருமல்லன் குணபரன்
 மயேந்திரப் போத்தரசரு அடியான்
 வயந்தப்பிரி அரசரு மகன் கந்தசேனன்
 செய்வித்த தேவகுலம்."

இதனால் மகேந்திரப் போத்தரசனுடைய பட்டப் பிருதுகள் :- பகாப்பிடுகு, லலிதாங்குரன், சத்துருமல்லன், குணபரள் என்பவை என்று தெரிகின்றது. இக்காரணங்களைக் கொண்டுதான் அப்பரது பெருமை கண்டு மகேந்திரவர்மன் சைவனாகிக் குணபரேச்சரம் என்ற ஆலயத்தைத் திருவதிகையில் கட்டி யிருக்கலாமென்று ஊகிக்கிறார்கள்.