பக்கம் எண் :


790திருத்தொண்டர் புராணம்

 

முற்சேர்க்கை: - 3

திருச்சிற்றம்பலம்

மூன்றாம் பகுதி - இரண்டாம் பாகம்

மூன்றாம் பதிப்பின் முன்னுரை

பெரியபுராணப் பேருரையை மறுபதிப்பிட்டு வெளியிடும் பொறுப்பு 1961 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் என் மேலதாயிற்று. அதற்கான ஆயத்தங்களைச் செய்து வந்தேன். உரைநூல் பகுதிகளில் மூன்றாம் பகுதியின் இரண்டாம் பாகம் முழுவதும் விற்பனையாகி விடவே, அதை மீண்டும் அச்சிட்டு அதன் இரண்டாம் பதிப்பை 12-3-1964இல் வெளியிட்டேன் அதன்பின் பதினாறு ஆண்டுகள் ஆறுதிங்கள் கழிந்து விநாயகர் சதுர்த்தி நன்னாளாகிய இன்று இதன் மூன்றாம் பதிப்பு வெளிவருதல் திருவருளின் துணையாலேயாகும்.

இடைப்பட்ட இந்தப் பதினாறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கால எல்லையில் இவ்வுரை நூலின் முதல் ஆறு பகுதிகளை ஒவ்வொன்றாக மறு பதிப்பிட்டு வெளியிட்டு வந்துள்ளேன். ஒவ்வொரு பகுதியின் மறுபதிப்பின் போதும் காகித விலையும், அச்சுக்கூலியும் பிற செலவுகளும் பன்மடங்கு உயர்ந்து இப்பணியை அரியதாக்கின. சைவ உலகத்திலும், தமிழ் இலக்கியத்திலும் இவ்வுரை தனக்கென்று ஒரு தனியிடத்தை நிறுவிக்கொண்டுள்ளது. இதன் பெருமையை அறிந்த அன்பர்கள் பலர் இவ்வுரை நூல்களைப் பெறப் பெரும் ஆர்வம் காட்டிவந்தனர். திருவருள் துணையும் அவர்கள் ஈடுபாடுமே இப்பதிப்பு வெளிவருவதில் எனக்கு உதவின.

இவ்வுரை நூலின் ஏனைய பகுதிகளின் மறுபதிப்புக்களை அச்சிட்டுதவிய சென்னை, இராயப்பேட்டை திரு. மு. நாராயணசாமி முதலியார் அவர்களே இப்பகுதியையும் தமது முருகன் அச்சகத்தில் சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்துள்ளார்கள் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இவ்வுரை நூலின் இறுதிப் பகுதியும் விரைவில் வெளிவரத் திருவருள் துணைபுரிவதாக.

"சேக்கிழார் நிலையம்"

371, வைசியாள் வீதி

                                                      க. மங்கையர்க்கரசி

கோயம்புத்தூர்

PIN - 641 001

13-9-1980