என்றது தானேயா யிருத்தலையும், "தன்னையறியாத தன்மையன்" என்றது "அவையே தானேயா" யிருத்தலையும் குறித்தன என்பதும் காண்க. ஈண்டுத் தன்னையறியாத தன்மை என்றது "தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை" (பிள்ளை - தேவா. கோளிலி) என்றபடி உள்ளநிலை, வானோர்க் கருளாக என்றது சந்திரனைத் தாங்குதல் முதலிய அருள்களுக்கு இடமாதல் குறித்தது. சடையான் - அவன் - உடையான் - நின்றான் - தன்மையன் என்று முடிக்க. தன்னையறியாத - சுட்டுணர்விறந்த என்றுரைப்பாருமுண்டு. "ஏகமாய் நின்றே" (சி. போ. வெ.) 92 அவன்கண்டாய் வானோர் பிரானாவா னென்றும் அவன்கண்டா யம்பவள வண்ணன் - அவன்கண்டாய் மைத்தமர்ந்த கண்டத்தான்; மற்றவன்பர னன்னெஞ்சே மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு. 93 அவன் என்று விதந்து பேசப்படும் சிவனே தேவர்கள் பெருமான்; பவள வண்ணமுடையவன்; கரிய கண்டமுடையவன்; நெஞ்சமே! அவனை மெய்யன்பால் விரும்புவாயாக. கண்டாய் - என்பன "கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்" என்புழிப்போலக் கண்டுகொள்க! என, ஏவற்பொருள்தந்து உறுதிதரும் உபதேசமொழிகளாய் நின்றன. அசையென்பாருமுண்டு. அவன் அகரச்சுட்டுக்கள் அகரவுயிரபோல் நின்றவன் என்ற குறிப்புத்தந்தன. மும்மலத்தார்க்குப் படர்க்கையிற் கூறும் குருவின் உபதேசமுமாம். மெய்த்த - மெய்யாகிய. 93 விருப்பினா னீபிரிய கில்லாயோ? வேறா விருப்பிடமற் றில்லையோ? - பொருப்பன்மகண் மஞ்சுபோன் மால்விடையாய் நிற்பரிந்து வேறிருக்க வஞ்சுமோ? சொல்லா யவள். 94 இறைவரே! அம்மையாரிடத்து நீர் வைத்துள்ள விருப்பத்தினால் பிரியாதிருக்கின்றீரோ?; அல்லது அவருக்குத் தனியிருப்பிட மொன்றுமில்லையோ? அன்றி அவர் உம்மைப் பிரிந்து தனியிருக்க அஞ்சுவரோ? சொல்வீராக. அம்மையோடு பிரிவின்றி இயைந்து ஐயன் எஞ்ஞான்றும் அம்மையப்பராக வீற்றிருக்கும் நிலையினைப் புனைந்து போற்றியது. விருப்பு - உயிர்களுக்கு அருள் புரியும் கருணை; உயிர்க்கருளும் இறைவரது நினைப்பாகிய அது தான் அம்மை என்று உபசரிக்கப் படுதலாலும், அது இறைவரது குணமாக எஞ்ஞான்றும் உடனிருந்ததலாலும், அந்நிலையை விருப்பினாற் பிரியகிலாயோ? என்று உரைத்தார்; குணத்திற்குக் குணிப்பொருளையன்றி வேறிருப்பிடமில்லை; குணத்தைக் குணியினின்றும் இடவகையாற் பிரித்தலாகாது; இறைவருக்குச் சத்தி அருட்குணம் என்பதனை வேறோர் இருப்பிடமற்று இல்லை என்று உரைத்தார். அஞ்சுமோ என்றது சாரம். முன்பாட்டு அவனது பெருமையை மூன்று வகையாலும், அதனை அடுத்து இப்பாட்டு அவனது பெருமையை மூன்று வகையாலும் போற்றிய அமைதியும் அழகும் காண்க. "அம்மையப்பரே யுலகுக் கம்மையப்ப ரென்றிக" (களிறு) "தோடுடைய செவியன்" (தேவா), முதலிய திருவாக்குக்களும் கருதுக. பொருப்பன் மகள் - னகர வொற்று நீக்கிக் காய்ச்சீராக்கி வகையுளி செய்து கொள்வது புறனடையாம். மஞ்சுபோல் மால் என்க. விடைக்கு ஆக்கின் மஞ்சு வெண்மேக மென்க. 94 அவளோர் குலமங்கை பாகத் தகலான்; இவளோர் சலமகளு மீதே; - தவளநீ |