கயிலையை நோக்கிச்செல்லும் வழியில் அருளியது இவ்வந்தாதியும், திருவிரட்டை மணிமாலையும் அம்மையார் பேய்க்கண வடிவம் வேண்டிப் பெற்றுத் திருக்கயிலை காண வழிப்பட்டுச் செல்லும் வழியில் அருளப்பட்டன. இவ்வாறே ஆளுடைய நம்பிகளும் கழறிற்றறிவாரும் வழியில் அருளிய திருப்பாட்டுக்களும் காண்க. வழிப்படுவோர் துதித்தல் வேண்டும் என்பதும் காணக்கிடக்கின்றது. ___________திருவிரட்டைமணி மாலை திருச்சிற்றம்பலம் கட்டளைக் கலித்துறை கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய் தளர்ந்திங் கிருத்த றவிர்திகண் டாய்தள ராதுவந்தி வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை யிளந்திங் களுமெருக் கும்மிருக் குஞ்சென்னி யீசனுக்கே. 1 (இ-ள்.) நெஞ்சமே! வெவ்வியதுயர் வந்து அடுகின்ற காலத்து அஞ்சித் தளர்ந்து வாளா வாடி யிங்கு இருக்கும் நிலையினை விட்டுவிடு; கங்கையும் திங்களும் எருக்குமலரும் இருக்கும் சென்னியினையுடைய ஈசனையே தளர்ச்சி யடையாமல் வந்திப்பாயாக! நெஞ்ச மென்பாய்! துயர்வந்து அடும்போது இங்குத் தளர்ந்திருத்தல் தவிர்தி; தளராது ஈசனுக்கே வந்தி என்று கூட்டி முடிக்க. கிளர்ந்து உந்து வெம்துயர் - முன் வினை தூண்ட அதுகாரணமாக வெங்கும்பிக் காயத்துள் வந்து சேரும் பிறவித் துன்பம். ஏனைய எல்லாத் துன்பங்களும் இதனுள் அடங்கும்; அடும் போது - அடர்த்து வருத்தும் காலம். "சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னு, நிழலாவன; வென்று நீங்காப் பிறவி நிலைகெடுத்துக், கழலாவினைகள் கழற்றுவ...ஐயாறன் அடித்தலமே" (தேவா); நெஞ்சமென்பாய் - என்றதனால் நினைத்துத் தக்கது செய்யும் கருவியாகி நெஞ்சம் எனப் பெயர் பெற்றும் அது செய்யாது வாளா துன்பத்துட் கழியும் என்பதும் குறிப்பு. எருக்கு - துன்பநீக்கமும், கங்கை - திங்களும் இன்ப ஆக்கமும் குறித்தன. வளர்ந்து - வளர் என்ற அடைமொழிகள் குறிக்க. ஈசனுக்கே - ஈசனையே வந்தி என்க; உருபு மயக்கம். திருக்கயிலைக்குச் செல்லும் வழியில் நெஞ்சத்தை வழிப்படுத்திச் சென்ற அமைப்பும் காண்க. இறைபணி நிற்றல் பாசநீக்கத்துக்குக் காரணம் என்பதாம். "ஏகனாகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை யின்றே" (சூ - 10 - போதம்). அவ்வாறு நிற்பாரைத் துயரம் வாதியர வென்பதாம். 1 வெண்பா ஈச னவனலா தில்லை யெனநினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும் பிறவாமைக் காக்கும் பிரான். 2 (இ-ள்.) முதல்வன் சிவனல்ல தில்லை என்று நினைந்து கூசி மனத்துள் நிலையாக வைத்துப் பேசியும் மறவாமல் வாழ்வாரை அப்பெருமான் இவ்வுலகிற் பிறவாமல் காப்பார். |