பெருமானைப்பல வகைகளாலும் பாராட்டுதல் இறைவரது திருவுருவ இயல்களையும், அங்கங்களையும், அவர் ஏந்துவன பூண்பனவற்றையும், ஊர்தியையும் தனித்தனி பலபல கூறுகளாகப் பாராட்டும் பாட்டுக்கள் அம்மையார் இறைவரை எவ்வளவு மனத்துள் அழுந்தியறிந்து நின்றனர் என்பதை விளக்குவன. பூணாகக் கொண்ட பாம்புகளைப் பற்றிய பல சுவைத் திறத்துப் பல பாடல்கள் (55, 57, 64, 66 முதலியன) - சிலம்பு (67) - ஆடுமிடம் (70 - 77) - சடை 75) - கபாலப் பலிப்பாத்திரம் (74) - திருவடி (80) - திருமிடறு (88) - கங்கை (90) - சிரமாலை (52) - அம்மையப்பராகிய கோலம் (39 - 58 -94) - திருமால் பாகம் (41 - 54) ஏந்திய அனல் (97 - 98) - ஏறு (100). இறைவரது தத்துவ நிலைகள் அவனே யிருசுடர் தீயாகாசமாவான் (21) - அறிவாயறிகின்றான்றானே (20) - அருளே உலகெலா மாள்விப்பது (9) - எவ்வுருவோ நின்னுருவம் (61) - காலையே போன்றிலங்கு மேனி (65) - ஏகமாய் நின்றாலும் தன்னை யறியாத தன்மையானும் (92) எக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும், அக்கோலத் தவ்வுருவேயாம் (33), பிறரறியலாகாப் பெருமையரும் தாமே, பிறரறியும் பேருணர்வுந் தாமே (30) - அரனென்கோ நான்முகனென்கோ வரிய, பரனென்கோ பண்புணர மாட்டேன் (18) - இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான் (5) - தொல்லுலகுக் காதியாய் நின்றவரன் (17) முதலிய பாட்டுக்கள் சிபெருமானது முழுமுதற் றன்மைகளைக் கூறி விளக்கும்முகத்தால் பதியிலக்கணம் பற்றிப் போற்றுகின்றன. அன்பையும் அருளையும் விளைக்கும் தன்மை, இறைவரைப் போற்றும் அருமைப்பாடு அம்மையாரது பாடல்களுள் ஒரு சிலவற்றையேனும் பயின்று சிந்தித்தார்க்கு அன்பும் அருளும் பெருக விளையும் என்ப தொருதலை. "பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல், சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்" (1) என்று உண்மையாய்க் கூறத்தக்க நிலை வேறு யாவர்க்குக் கூடும்? இடர் களையா ரேனும் எமக்கு இரங்காரேனும் - என் நெஞ்சு அவர்க்கு அன்பு அறாது. (2); அவர்க்கே எழுபிறப்பு மாளாவோம் - அவர்க்கல்லால் மற்றொருவர்க்கு எஞ்ஞான்றும் ஆள் ஆகோம் (3) என்று கூறும் துணிபு பெறின் உயிர்கள் உய்ந்துவிடுமன்றோ? வானத்தான் என்பாருமென்க...என் நெஞ்சத் தான் என்பான் யான் (6), யாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்துச் சிவனை மறைத்து வைத்தோம். ஆதலின் யாவர் அவனைக் காணவல்லார் (96) என்று கூறும் பெருமிதம் கண்டு துதிக்கற்பாலது. இம்மாலையால் ஏத்துவார் மாறாத காதலுடன் அண்ணலைச் சென்றேத்துபவராகும் நிலை யடைவர் என அம்மையார் இதற்குப் பயன் உரைத்தது முழு உண்மையேயாகும் என்ப தனுபவத்திற் காணப்பெறும். நிறந்திகழு மைஞ்ஞான்ற கண்டத்துவானோர் பெருமானே! 1) என்பறாக்கோலத் தெரியாடு மெம்மானார் (2) இறைவனே! எந்தாய்! (5) முன்னஞ்சத்தாலிருண்ட மெய்யொளி சேர்கண்டத்தான் (6); வெண்ணீற்ற அம்மான் (7); எனக்கினிய வெம்மானை யீசனை (10); கங்கையான்றிங்கட் கதிர்முடியான் பொங்கொளிசே ரங்கையான் (11); மின்செய்வான் செங்சடையாய்! வேதியனே! (15); சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன் வானோர் பிரான் (44) சொன்முடிவொன் றில்லாத சோதியாய் (63); மிக்குலக மேழினுக்குங் கண்ணாளா! (72); முதலியவை அம்மையார் இறைவரைப் பாராட்டிப் போற்றும் அருமைப் பாட்டினால் அன்பு ததும்பி நிற்கும் நிலை கண்டு போற்றத்தக்கது. |