என அந்தமாகக்கொண்டு வைத்து மண்டலித்து முடித்தலாலும் இது இத்திருவந்தாதியின் பகுதியேயாகும். இவ்வந்தாதியைப் பரவுவார்கள் சிவபெருமானிடம் சேர்ந்து துதித்து நித்தியமாய் வாழ்வார்கள் என்றபடி. வெண்பா அந்தாதி மாலை என்க. வெண்பா - இதன் யாப்பும், அந்தாதி - ஒரு பாட்டின் முடிபு அடுத்த பாட்டின் முதலாகவரும் கோவையும், மாலை - முதற்பாட்டும் இறுதிப் பாட்டும் முன் சொன்னபடி சேர்ந்து முடிந்து, நூறு பாட்டுக்கள் இருபுறமுள்ள மணிகளாகவும் ஒன்று நடுமணியாகவும் ஆக 101 மலர் மணிகள் கொண்ட தொடரும் குறித்தன. கரைவு - பேரன்பினால் உள்ளங் கரைந்து பாட்டாக மேல் எழுதல். சொல் உரையினால் பரவுவார் என்க. சொல்லிய உரை என்பது. பரவுவார் - ஏத்துவார் (ஆகுவர்) என்று ஆக்கச் சொல் வருவித்துப் பெயர்ப் பயனிலை கொண்டு முடிக்க. பேராத - பெயராத - மாறாத. காதல் - அன்பின் மேனிலை. 101 திருச்சிற்றம்பலம் அற்புதத் திருவந்தாதி உரை முற்றும்._________இயற்றமிழ் திருவந்தாதியைப் பற்றிய சில குறிப்புக்கள்:- திருத்தொண்டத் தொகையினுள் ஆரூர் நம்பிகளாற் போற்றப்பட்ட உண்மை நாயன்மார்கள் அறுபத்து மூவர்களுள், பெண்ணடியார்கள் மூவருள், இசைத்தமிழும் இயற்றிமிழும் வல்ல பெருமை காரைக்காலம்மையாருக்கேயுரியது. இதுவன்றித் தமிழுலகிலும், இப்பெருமை அம்மையாருக்கே உண்டு. அம்மையாரது இயற்றமிழ் மிகச் சிறந்த எளிய இனிய நடையிலமைந்தது; ஆயினும் ஆழ்ந்து அகன்ற நுண்ணிய கருத்துக்களை கொண்டுள்ளன இவர்தம் இப்பாட்டுக்கள். இவை வெண்பா என்றபெயருக்கேற்ற எல்லா நலன்களையும் கொண்டு விளங்குகின்றன. யாப்புக்காகச் சொல்லை சிதைவு படுத்தாது, சொல்லும் பொருளும் ஒத்தியலும் பெருங்கவி யிலக்கணம் வாய்ந்தன. ஆட்படுதல் சிவபெருமானுக்கு ஆளாகிப் பணி செய்திருப்பதுவும் அவரது அடியார்க்கடிமை செய்திருப்பதுவுமே தமது பிறவிப் பயன்; அவையே உயிர்க்கெல்லாம் உறுதியாவது என்பது அம்மையார் கொண்டொழுகிய துணிவும் வாழ்க்கைத் திறமுமாவன என்பது இப்பாட்டுக்களால் நன்கு விளங்கும். அவர்க்கே எழு பிறப்பு மாளாவோம் (3); யானே தவமுடையேன்...ஆளாயினேன் (7); ஒன்றே நினைந்திருந்தேன்...ஆளாமது (11); ஆட்பட்ட, பேரன்பே யின்னும் பெருக்கு (31) குறித்துத்தொழு தொண்டர் பாதம் (40); பணியான் செய்யேனேல், அண்டம் பெறினு மதுவேண்டேன் (72); உள்ளமே எப்போது மோது (73); சிந்தையார்க் குள்ள செருக்கு (79); நற்கணத்தி லொன்றாய நாம் (86) சேவடிக்கே யாளாய் (91); என்னெஞ்சத் தானென்பன் யான் (6); நெஞ்சினுள் ளடைத்து...வைத்தோம் (96) முதலியவை பார்க்க. தாயின் அன்பு பெருமானிடத்தும் பிராட்டியிடத்தும் அம்மையார் தாயாந் தன்மை நிலையில் தலையன்புகொண்டு பேணினராதலின் "தாயுமிலி தந்தையிலி தான்றனியனா"கிய இறைவரால் "அம்மையே!" என்றழைக்கும் சிறப்புடையவராயினர். பாம்புகளை அணியாதீர் - பொன்னாரம் மற்றொன்று பூண் - இரந்துண்ண வேண்டா - இடுகாட்டில் ஆடும்போது பிராட்யைக் கூடவைக்க வேண்டா என்றிவ்வாறு வரும் பற்பல பாட்டுக்களும் இத்தன்மையை நன்கு விளக்குகின்றன. வளராத இளம் பிறையைப்பற்றி வரும் பாட்டுக்கள் அம்மையராது பேரிரக்கம் மிக்க திருவுள்ள நிலையை மேலும் காட்டுவனவாம். |