பதிப்புரை ஆத்மாநாம் கவிதைகளை முழுமைப்படுத்தும் முயற்சியில்தான் 1989 ஆம் ஆண்டு (தன்யா-பிரம்மா வெளியீடாக) ஒரு நூல் கொண்டு வரப்பட்டது, இந்தத் தொகுப்புக்கு முன் (ஆத்மாநாம் கவிதைகள்) ஆத்மாநாம் ‘காகிதத்தில் ஒரு கோடு’ என்ற மிக மெல்லிய ஒரு தொகுதியை வெளியிட்டிருந்தார். ழ வெளியீடாக மே 1981இல் வெளிவந்த அதில் 37 கவிதைகள் இடம்பெற்றன. இதற்குப் பிறகு அவரிடம் ஒரு பெரிய தொகுப்புக்கான கவிதைகள் சேர்ந்திருந்த போதிலும் அந்தக் காலகட்டத்தில் வெளியீட்டு வசதிகள் மிகக் குறைவாக இருந்ததால் ஒரு தேக்கநிலை இருந்தது. ஒரு புத்தகம் அல்லது கவிதைத் தொகுப்பு வெளிவருவது ஒரு கனவு நிறைவேற்றத்திற்கு இணையாகக்கூடக் கருதப்பட்டது. இந்தச் சமயத்தில்தான் ஆத்மாநாம் தனது கவிதைகளின் கையெழுத்துப் பிரதிகளை என்னிடம் தந்து திரு. மீராவின் உதவியுடன் இன்னொரு தொகுப்புக்கு முயற்சி எடுக்கச் சொன்னார். ஆனால் அப்போது மீரா வெளியிட்ட ‘அன்னம் நவகவிஞர் வரிசை’ யில் ஆத்மாநாம் இடம்பெற முடியவில்லை. காரணம் ஏற்கெனவே ஆத்மாநாமுக்கு முதல் தொகுதி வந்துவிட்டிருந்தது. இருப்பினும் தன் அடுத்த தொகுதி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் எனப் பின்பற்றப்பட வேண்டிய குறிப்புகளை ஒரு கடிதத்தில் எழுதி, ஓவியர் கே. முரளிதரனிடமிருந்து சில கோட்டோவியங்களைப் பெற்று எனக்கு அனுப்பிவைக்கவும் செய்தார். அந்தத் தொகுப்புக்கு ஆத்மாநாம் வைத்த பெயர் சில எதிர்கால நிஜங்கள். இதற்கான அட்டை ஓவியத்தையும் திரு. கே. முரளிதரன் செய்து தந்திருந்தார். பொதுவாகத் தன் கவிதைகள் வெளிவந்த இதழ்கள் மற்றும் மாதம் போன்ற தகவல்களைப் பதிவு செய்து வைப்பது பற்றி ஆத்மாநாம் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வெளிவந்தவை, வெளியிடப்படாதவை என்று பிரித்து என்னிடம் இரண்டு கோப்புகளைக் கொடுத்திருந்தாரே ஒழிய வெளிவந்த இதழ்கள் பற்றிய குறிப்புகள் அவற்றில் இல்லை. இவை தவிர ஆத்மாநாமின் இறப்புக்குப் பிறகு அவரது அம்பத்தூர் வீட்டிலிருந்து 6 நோட்டுப் புத்தகங்களை நண்பரும் கவிஞருமான திரு. எஸ். வைத்தியநாதன் பத்திரமாக எடுத்து வைத்திருந்து என்னிடம் கொடுத்தார். அந்த இரண்டு கோப்புகளில் இல்லாத பல புதிய கவிதைகள் இந்த நோட்டுப் புத்தகங்களில் காணப்பட்டன. அவ்வாறே சில மொழிபெயர்ப்புகளும். என்றாலும் பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமை |