பக்கம் எண் :

14 

யாக்காது பென்சிலில் எழுதி வைத்திருந்தார் ஆத்மாநாம் - ஒரு வேளை பிறகு சீர்செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்படி விட்டிருக்கலாம். மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை அவர் மொழியாக்கம் செய்தவற்றையும் சிற்றிதழ்களில் வெளியிட்டவற்றையும் பற்றி அவர் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. சில மொழிபெயர்ப்புகளைப் பற்றிக் கடிதத்தில் குறிப்பிடடிருக்கிறார். ‘எல்சால்வாடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையின் மொழி பெயர்ப்பின் கையெழுத்துப் பிரதியும் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை. கணையாழியில் அது வெளிவந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதைத் தேடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை. இது தவிர, மேலும் சில விடுபடல்கள் எனது கவனக்குறைவின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம். என்னிடம் கொடுத்திருந்தது போலவே கையெழுத்துப் பிரதிகளின் ஒரு கோப்பினைத் தன்னிடமும் ஆத்மாநாம் கொடுத்ததாக ஞானக்கூத்தன் கூறினார். அவரிடம் கொடுக்கப்பட்ட கோப்பில் இருந்தவற்றிற்கும் என்னிடம் தரப்பட்டிருந்த கோப்பில் இருந்த கவிதைகளுக்கும் ஏதும் விடுபடல் இருக்கிறதா எனச் சரிபார்த்து, விடுபடல்கள் எதுவுமில்லை என்று எனக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்தார். ஆனால் சின்னச் சின்ன வார்த்தை மாற்றங்கள் - இரண்டு அல்லது மூன்று கவிதைகளில்-இருப்பதாக அவர் எழுதியிருந்தார். நான் கூடுமானவரை என்னிடம் உள்ள கையெழுத்துப் பிரதிகளின் அடிப்படையில்தான் இந்தத் தொகுப்பு நூலைப் பதிப்பித்திருக்கிறேன்.

கடிதங்களைப் பொறுத்தவரை ஆத்மாநாம் சென்னை நண்பர்களுக்கு எதுவும் எழுதியிருக்கவில்லை என்று ஞானக்கூத்தன் மூலமாகவும் கவிஞர் ஆனந்த் மூலமாகவும் அறிந்துகொண்டேன். இதற்குக் காரணம் அவர்கள் வாரம் ஒரு முறையாவது திருவல்லிக்கேணியில் சந்தித்துக்கொண்டதாக இருக்கலாம் என்று ஆனந்தும் ஞானக்கூத்தனும் அபிப்ராயப்பட்டார்கள். எனவேதான் நான் என்னிடமிருந்த கடிதங்களிலிருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து இங்கே சேர்த்திருக்கிறேன்.

நேர்காணல் பதிவு செய்யப்பட்டது வேறு ஒரு விஷயம். கோவை அகில இந்திய வானொலிக்காக அவரை நான் நேர்காணல் செய்ய வேண்டி வந்தது. அதற்காகக் கோவை வந்தவர் ஊட்டிக்கு வருகை தந்தபோது இந்தப் பேட்டியைப் பதிவு செய்தோம். பேட்டியின்போது சுகுமாரன், பிரதிபா ஜெயச்சந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர். எனினும் நான் பதிவு செய்த பேட்டியின் முக்கியத்துவத்தை ஆத்மாநாம் இறந்த பிறகே உணர்ந்தேன். பிறகு அந்தப் பேட்டியுடன் ஆத்மாநாமின் ‘கவிதை பற்றி’ என்ற ஒருநீண்ட கட்டுரையையும் சில வெளிவராத கவிதைகளையும் சேர்த்துச் சிறிய நூலாக வெளியிட்டேன். புத்தக விமர்சனங்களை எழுதுவதிலும் பொறுப்பும் ஈடுபாடும் ஆத்மாநாமுக்கு இருந்தது. விமலாதித்த மாமல்லனின் சிறுகதைத் தொகுப்பிற்கும், ஆனந்தின் இரண்டு சிகரங்களுக்கு இடையேஎன்ற குறுநாவலுக்கும் அவர் எழுதிய மதிப்புரைகள் மீட்சி (மாத இதழாக வெளிவந்த சமயத்தில்) வந்தன.