ழ கவிதை இதழின் ஆசிரியராக இருந்தபோதே அவர் 2083 ஒரு அகால ஏடு என்ற, ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்ட ஒரு இதழைத் துவக்கினார். இதை அச்சிட அப்போது அவருக்குப்பண வசதி இல்லாததால் தட்டச்சு செய்து பிரதி எடுத்து எல்லோருக்கும் சுற்றுக்கு அனுப்பினார். ஆனால் அந்த அகால ஏடு ஒன்றே ஒன்றுதான் வெளிவந்தது. வெளியீட்டுக் கால ஒழுங்கில் அன்றி ஆத்மாநாம் கவிதைகள் பதிப்பில் இருந்த வரிசையிலேயே கவிதைகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அது ஏற்கெனவே வெளிவந்த காகிதத்தில் ஒரு கோடு தொகுதியை உள்ளடக்கியது. வெளிவராத கவிதைகளும், பேட்டியும், கட்டுரைகளும், மொழிபெயர்ப்புக் கவிதைகளும், கடிதப்பகுதியும் இந்தப் பதிப்புக்காகப் பிரத்யேகமாய் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. ‘யார் அராஜகவாதி?’ என்ற ஒரு நீண்ட கட்டுரைப்புத்தகத்தை ஆத்மாநாம் எழுதுவதற்குத் திட்டமிட்டுக் குறிப்புகள் சேகரிக்கத் தொடங்கியபோதிலும், அதன் எந்த வடிவமுமே எனக்குக் கிடைக்கவில்லை. அவர் செய்ய நினைத்துத் தொடங்கிய வேறுசில ஐரோப்பியக் கவிஞர்களின் கவிதை மொழிபெயர்ப்புகளையும் முடிக்காமலே விட்டுவிட்டார். குறிப்பாக அவருக்குப் பிடித்த அரசியல் நிலைப்பாடு கொண்ட பெர்டோல்ட் ப்ரக்டின் கவிதைத் தேர்வொன்றிற்கு அவர் திட்டம் வைத்திருந்தார். ஆனால் அதில் ஒரு கவிதையை மாத்திரமே மொழிபெயர்த்து முடித்திருந்தார். அந்தோனின் பார்த்துஸெக் என்ற கிழக்கு ஐரோப்பியக் கவிஞரின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை நான் செய்த சமயத்திலேயே அவரும் செய்திருந்தார். அவை வெளியான விவரங்கள் சரியானபடிக்குக் கிடைக்கவில்லை மொழிபெயர்ப்புக்கான கையெழுத்துப் பிரதிகளும் கிடைக்கவில்லை. இந்தப் பதிப்பு வெளிவரக் காப்புரிமை அனுமதி அளித்த ஆத்மாநாமின் சகோதரர் திரு. ரகுநந்தன் அவர்களுக்கு என்னுடைய பிரத்யேக நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஆத்மாநாமின் கையெழுத்துப் பிரதிகள் குறித்துத் தெளிவுபடுத்திய ஞானக்கூத்தனுக்கும் மற்றும் கடிதங்கள் பற்றிய தகவல்கள் கேட்டபோது உதவிய ஆனந்துக்கும் என் நன்றிகள். புது எழுத்து ஆசிரியர் மனோன்மணி சில முக்கிய விடுபடல்களை உரியநேரத்தில் சுட்டிக்காட்டினார். கணையாழி யில் வெளிவந்த ஆத்மாநாமின் இரண்டு மொழிபெயர்ப்புகளை பிரதி எடுத்து உதவினார் ஸ்ரீநேசன். இந்த இருவரையும் இந்தச் சமயத்தில் நன்றியுடன் நினைக்கிறேன், முக்கியமாக இந்தப் பதிப்பு வருவதற்கு மிக அவசியமான தூண்டுதலாய் இருந்த மனுஷ்ய புத்திரனின் ஆர்வத்தையும். பிரம்மராஜன் |