பக்கம் எண் :

130ஆத்மாநாம் படைப்புகள்

வெளிநாட்டு மனிதர்கள்

வெளிநாட்டு மனிதர்கள் வந்துள்ளார்கள்
என்று உதவியாளன் சொன்னான்
உள்ளே வரச் சொல் என்றேன்
தொப்பியைக் கழற்றியபடி இருவர் வந்தனர்
செருப்பைக் கழற்றிவிட்டு
உள்ளே வரச் சொன்னேன்
ஏ. ஸியைப் போட்டுவிட்டு
என்ன வேண்டும் என்றேன்
விஸ்கி என்றனர்
இங்கே எல்லாம் லோக்கல்தான் என்றேன்
மேஜை மேல் உள்ள பத்திரிகையைப் புரட்டி
என்ன இது இந்திய எழுத்துக்கள் என்று கேட்டனர்
அவை அனைத்தும் மொழிபெயர்ப்புகள் என்றேன்
சிரித்தபடி அவர்கள்
வளமான தமிழர்கள் வாடலாமா
என்றவன் எவன் என்று கேட்டனர்
அதற்கென்ன இப்போது என்றேன்
எஸ்தோனிய மொழியிலும் ஸ்வாஹிலியிலும்
அதை மொழிபெயர்க்கவே இங்கு வந்தோம் என்றனர்
குப்பை போல் கிடந்த
காகிதக் கட்டுக்களிலிருந்து
அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை
எடுத்து நீட்டினேன்
லோக்கல் வந்தது