2083 ஆகஸ்ட் 11 என் கவிதை ஒன்று இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில் கிடைத்தது கடற்கரையில் நானும் ஞானக்கூத்தனும் பேசிக்கொண்டிருந்தோம் சுண்டல் வாங்கிப் பிரித்தால் காகிதத்தில் ஒரு கோடு ஆத்மாநாம் எனும் வாசகங்கள் கவிதை ஆரம்பம் ஆச்சர்யத்துடன் ஞானக்கூத்தனைக் கேட்டேன் இன்னும் இங்கேவா இருக்கிறோம் அவர் சூளைச் செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது என்றார் என்ன இது வினோதம் இருந்த இடத்திலேயே இருப்பது என்றேன் இருப்பதை உணர்வதே வாழ்க்கை என்றார் நகுலன் எங்கே என்றேன் நவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார் என்றார் உங்கள் சமீபத்திய கவிதை என்றேன் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்றார் நன்றி என்றேன் அப்பொழுதுதான் ஒரு அணுகுண்டு வெடித்த சப்தம் கேட்டது இருவரும் அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம் |