பக்கம் எண் :

168ஆத்மாநாம் படைப்புகள்

காகிதத்தில் ஒரு கோடு

குறுக்கு நெடுக்குக் கோடுகள்
ஒவ்வொன்றாய்ப் போடுகிறீர்கள்
ஒன்று
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
ஒரு லட்சம்
பத்து லட்சம்
ஒரு கோடி
பத்துக் கோடி
நூறு கோடி
மேலும் மேலும்
அதன் எல்லா இயல்புகளில் போட்டுவிடுகிறீர்கள்
வேறு வழியே இல்லை
பின்னர் சின்னதும் பெரியதுமாய்ப் போடுகிறீர்கள்
அதுவும் மேற்படி
மயக்க முடிவுக்கு வருகிறீர்கள்
அனைத்திற்கும் முடிவில்
கோடுகளே இல்லாமல் போய்விடுமோ
உங்கள்
ஆரம்ப வெள்ளைத் தாளைப் போல
ஆனால்
வெள்ளைத் தாளிலும்
நமக்குத் தெரியாமலும்
சில கோடுகள்
குறுக்கிலும் நெடுக்கிலும் இருக்கும்