வேறொருவராகும் கலை... ஆத்மாநாமின் கவிதைகள்: ஒரு மறுபார்வை ஆத்மாநாமின் கவிதைகள் வெளிவந்த காலத்திற்கும் இன்றைக்குமான இடைவெளியில் அவருடன் எழுதிக்கொண்டிருந்த பல கவிஞர்களின் கவிதைகளில் அந்தக்கால கட்டத்திற்குரிய மங்கிய சாயல் படிந்துவிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் இப்பொழுது படிக்கும்பொழுதும் ஆத்மாநாமின் கவிதைகளில் கிடைக்கக்கூடிய புத்துணர்வினை எந்த ஒரு கூர்ந்த கவிதை வாசகனாலும் மறுக்க முடியாது. அவரது கவிப்பொருள் எல்லைகள் கொண்டதாயிருந்தது என்பது உண்மை. அதிக வகைப்பாடுகளை அவர் முயன்று பார்க்கு முன் அவரது வாழ்வை அவரே முடித்துக்கொண்டுவிட்டார். ஆனால் எழுதப்பட்ட கவிதைகள் யாவும்தொய்வின்றி, செறிவுமிக்கவையாகவே வெளிவந்திருக்கின்றன. அவருடைய கவிதைச் சுயத்திற்கும் அவரது பட்டறிவுச் சுயத்திற்கும் இடையே அதிக வேறுபாடு இருக்கவில்லை என்பதை அவருடன் நெருங்கிப் பழகிய எவருமே சொல்லி விடுவார்கள். இருப்பினும் இன்று அவர் கவிதைகளைப் படிக்கும் பொழுது அவரது பல சுயங்களுக்கிடையில் அவர் உணர்ந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. 2002இல் கவிதைகள் எழுதும் பெரும்பான்மையானோருக்கு “முற்போக்கு” அல்லது “பிற்போக்கு” போன்ற முத்திரைகள் குத்தப்படும் அசௌகரியங்கள் இல்லை. இதை இன்னும் நுண்மையாகச் சொல்வதானால், ஆத்மாநாம் எழுதிய காலத்தில் மேலோங்கியிருந்த தனிநபர் அனுபவ உலகத்திற்கும் பொதுநபர் அனுபவ உலகத்திற்குமிடையிலான பெரும் மோதல்கள் இன்றிருப்பதாகத் தெரியவில்லை. எனினும் சிறப்பாக எழுதப்பட்ட ஒரு கவிதையானது தனிநபர் மற்றும் பொதுநபர் அனுபவ உலகங்களுக்கு அப்பால், சென்றுவிடுகின்றது. அந்த “அப்பாலில்”் உள்ள எல்லையில் நல்ல கவிதைகள் மற்றும் மோசமாக எழுதப்பட்ட கவிதைகள் ஆகிய இரண்டு வகைகள் மாத்திரமே இருக்கின்றன. 70களிலும் 80களிலும் கட்சிக் கருத்துருவங்கள் கவிதை என்ற பெயரில் செண்டிமென்டல் அபத்தங்களாக உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றுக்கு ஆதரவளித்த விமர்சகர்களும் உற்சாகமாக அவற்றைக் கவிதை என்று கூறிப் புளகாங்கிதமடைந்தார்கள். கவிதையல்லாத அறைகூவல்களுக்கும் கோஷங்களுக்கும் இன்று நேர்ந்துள்ள கதியை கவிதையின் போக்குகளைக் கவனித்துக் கொண்டு வந்திருப்பவர்கள் நன்கு அறிவர். ஆத்மாநாம், “கவிதையின் அரசியல்மயமாக்கலைத்”் தகுந்த முறையில் எதிர்கொண்டவர் மட்டுமல்ல; அவரே மிகச் சிறந்த பொதுநபர் |