அனுபவ உலகக் கவிதைகளை எழுதியுமிருக்கிறார். கவிதை என்ற பெயரில் பிரச்சார உற்பத்தி செய்தவர்களை அவர் “முற்போக்கு மடையர்கள்”் என்று தனது கவிதையொன்றில் குறிப்பிடுகிறார். ஆத்மார்த்தமான ஒன்றுதலுடன்தான் அவரது பெரும்பான்மைக் கவிதைகள் வெளிப்பட்டிருக்கின்றன: இந்தச் செருப்பைப் போல் எத்தனைப் பேர் தேய்கிறார்களோ இந்தக் கைக்குட்டையைப் போல் எத்தனைப் பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ இந்தச் சட்டையைப் போல் எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ அவர்கள் சார்பில் உங்ளுக்கு நன்றி இத்துடனாவது விட்டதற்கு (நன்றி நவிலல்) அவருடைய தோழமையுணர்வானது வெறும் “காம்ரேட்”் என்றழைப்பதில் மட்டும் நின்றுவிடவில்லை என்பதை வெளியேற்றம் கவிதையைப் படிக்கிறபோது உணர முடியும். கவிஞர் என்கிற ஒற்றை அடையாளத்தை அவர் விரும்பியிருக்கமாட்டார். அவர் உயிருடனிருந்தபோது ஒரு இலக்கியவாதி என்று அழைக்கப்படுவதையே விரும்பினார். ஏனெனில் அவர் ழ என்ற கவிதை ஏட்டின் ஆசிரியராக இருந்தார். மொழிபெயர்ப்பாளராக, கட்டுரையாளராக மற்றும் விமர்சகராகவுமிருந்தார். அவர் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த கவிஞர்கள் பெரும்பாலும் தம்மை ஒரு இயக்கத்துடன் பிணைத்துக்கொண்டவர்களாக இருந்தார்கள். நஸீம் ஹிக்மெத், நதன் ஸாக் போன்றோர் எடுத்துக்காட்டுகள். அவருக்கு ஓவியத்திலும் இசையிலும் இருந்த ஈடுபாடு அளவற்றது. சிறந்த எல். பி. ரெக்கார்டுகளின் சேகரிப்பினை அவர் வைத்திருந்தார். ஆனால் அவரது இசை ஈடுபாடு பொத்தாம்பொதுவான குறிப்புகளாகவே கவிதைகளுக்குள் கசிந்து வந்திருக்கின்றது. இசை பற்றிய தனித்துவ அனுபவங்களாக இல்லாமல், தமிழ்நாட்டின் சமகால ஓவியர்களுடன் அவர் கொண்டிருந்த நட்பு குறிப்பிடத்தக்கது. எல்லாக் கலைகளும் இசையின் நிலையை எய்துவதற்கான யத்தனத்தைச்செய்கின்றன என்று குறிப்பிட்டார் வால்ட்டர் பேட்டர். கலைகளில் ஒரு முத்தி நிலையாக இசையைச் சொல்லலாம். இசையைக் கேட்டால் போதும். வார்த்தையாகவோ வரிவடிவமாகவோ, மொழிபெயர்த்தோ புரியவேண்டிய அவசியமில்லை. சிறந்த கவிதையின் இதயத்தில் ஒருஅரூப நடனமிருக்கிறது என்கிறார்கள் சிலர். கவிதையின் இதயம் ஒரு “நிச்சலன மௌனம்” என்கிறார்கள் வேறு சிலர். இதில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட விஷயம்தான் ஆத்மாநாமின் கவிதைகளுக்குச் சாலப் பொருந்துகிறது. இந்த நிச்சலன மௌனத்தை நோக்கியே ஆத்மாநாமின் பெரும்பான்மைக் கவிதைகள் யாத்திரை மேற்கொள்கின்றன. அமைதி அமைதி, இசை, ஓசை ஆகிய கவிதை |