கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். மேலும் அமைதி, மௌனம், இசை, ஓசை இவற்றுக்குமத்தியில் அர்த்தம் ஒன்றிருக்கிறதா என்கிற கேள்வியும் தேடலும் ஆத்மாநாமுக்கு எழுந்தவண்ணமிருக்கிறது. கேள்விகள் கேட்கப்படாமலே பதில்கள் உண்டாகும் அபத்தம் மற்றும் பொருள் கிடைத்தவுடன் உலகம் நாசமாகும் கலவரம் ஆகியவை இரண்டு கவிதைகளில் பதிவாகி இருக்கின்றன : தாள்கள் படபடக்க எழுத்துக்கள் வார்த்தைகளாகி வார்த்தைகள் வாக்கியங்களாகி பொருள் கிடைத்தது பொருள் கிடைத்தவுடன் உலகம் நாசமாகி புதியதாய்த் தெரிந்தது ஒரு உலகம் ... ... ... மேலும் கவிதை தானே எழுதிக்கொண்டுவிடும் ஆடோமாடிக் எழுத்துக்கான விழைவும் இந்தக் கவிதையில் இருப்பதைப் பார்க்கலாம். டாடாயிஸ்டுகளின் ஆடோமாடிக்ரைட்டிங் (Automatic Writing) பற்றித் தீவிர அக்கறை உடையவராயிருந்தார் ஆத்மாநாம். இவற்றுடன் அவரின் கவிதை உருவாக்கம் பற்றிய கவிதைகளையும் இணைத்துப்படிப்பது நல்லது. பதில் என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்: குற்றுகர முற்றுகர சந்திகளை சீர்சீர் ஆய்ப் பிரித்து தளை தளையாய் அடித்து ஒரு ஒற்றை வைத்து சுற்றிச் சுற்றி வந்து எங்கும் மை நிரப்பி எழுத்துக்களை உருவாக்கி பொருளைச் சேர்த்து வார்த்தைகள் ஆய்ச் செய்து ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து ஏதாவது சொல்லியாக வேண்டும் நமக்கேன் வம்பு. கவிதையின் உச்சமே கடைசி வரியில் இருக்கும் கிண்டல்தான். பண்டிதர்களையும், யந்திரத்தனமாய் இடைவெளியேயின்றி எழுதித் தள்ளுபவர்களையும் பற்றியும் எழுதப்பட்டதாய் இதைக் கருதலாம். எழுதும் செயலால் எழுத்து மாற்றத்திற்குள்ளாகி ஒரு புதிய பொருள் தோற்றுவிக்கப்படுகிறது என்கிற சம்பிரதாயப் பார்வையிலிருந்து முற்றிலும் விலகிப்புதிதாய்ப் படைக்கப்பட்ட படைப்புக்குள்ளாகிற எழுத்தால் படைத்தவன் மாறிக்கொண்டேயிருக்கிறான் என்ற நூதனப் பார்வையை முன் வைக்கின்றன சில கவிதைகள். மனதின் உள்வயமான இயங்குதளங்கள் குறித்து அதி தீவிர பிரக்ஞை உடையவர்களுக்கே இத்தகைய கவிதைகள் சாத்தியமாகும். மேலும் ஓயாத |