இயக்கமிகுந்த வரிகளைக் கொண்ட கவிதைகளை ஆத்மாநாமில் பார்க்கலாம். ஒரு சாதாரண விவரணைக் கவிதைகூட இறுதியில் விவரணை என்ற தளத்தினை மிஞ்சிவிடும் இயக்கம் கொண்டதாயிருக்கிறது. ஆரம்ப நிலையிலிருந்து சகலமும் தலைகீழாகும் தன்மையும் இந்தக் கவிதைகளில் உள்ளன. கோடுகளற்ற ஒரு வெற்றுத் தாளுக்கும் கோடுகளால் நிரப்பப்பட்ட ஒரு தாளுக்குமிடையிலானது போல. அனுபவத்திற்கும் அழகியலுக்கும் இடையிலான எதிர்நிலைகள் இக் கவிதைகளில் கைக்கொள்ளப்பட்டு இறுதியில் சமனப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தன்னுடையதைத் தவிர வேறு பல வாழ்க்கைகளை வாழமுடியாவிட்டால் (கற்பனையிலாவது) அவன் தன் சொந்த வாழ்க்கையையே சீராக வாழ முடியாதவனாகிப் போகிறான் என்று பால் வெலேரி ஒரு முறை குறிப்பிட்டார். இதைச் சாத்தியமாக்குவதற்கு ஒரு கவிஞனுக்குத் தேவைப்படுபவை முகமூடிகளாகும். இந்த முகமூடிகளின் தேவையை ஆத்மாநாம் அறிந்திருந்தார். பிறரின் வாழ்க்கைகளை வாழ்ந்துபார்க்கும் படைப்பாளி மனநிலையும் அவரிடம் காணப்படுகிறது, இதை ஜான் கீட்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞர் “நெகடிவ் கேபபிலிட்டி”் (Negative Capability) என்று குறிப்பிட்டார். ஆத்மாநாம் ஓவியன் என்று குறிப்பிடும்போது தன்னையே குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். சில சமயங்களில் அத்யந்த உணர்தலுடன்சக கலைத்துறை ஓவியனைக் குறிப்பிடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்: ஓவியம் உலகை அடக்கும் உலகம் ஓவியத்தை அடக்கும் ஓவியன் தன்னை அடக்கி உலகை ஓவியத்துக்குள் ஒடுக்குவான் உயிர் மூச்சை வண்ணக் கலவையாக்கி செங்குருதி வியர்வை கலக்கி   ஒரு முகம்   ஒரு ஜாடி   ஒரு காட்சி   ... ... (ஓவிய உலகம்) காளை நான் என்ற கவிதையில் மூக்கணாங்கயிறு பிணைக்கப்பட்ட ஒரு காளையாகவே தன்னை உணர்கிறார். அத்துடன் செடி என்ற கவிதையும் சேர்த்துக்கொள்ளலாம். உள்வயமான அனுபவத்தின் ஒருமையின் மீது கவிதை தன்னை ஸ்தாபித்துக்கொள்கிறது- அதாவது அனுபவப்படும் பிரக்ஞையின் மீது கவிதை இயங்குகிறது. உரைநடை போன்றவை வெளிவாழ்வின் தொடர் செயல்பாடுகளால் அமைந்த சட்டகத்தின் அடிப்படையில் இயங்குகின்றன. கவிதையின் ‘நான்’ எனும் சுயம் குறித்த தயக்கங்களும் சந்தேகங்களும் நவீன காலத்தில் எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய |