ஒரு நிஜக்கதை ஒரு நாள் இரவு நிர்மலமான வானத்தின் நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தேன் ஒரு மாபெரும் மனிதனாகி எவரும் முயலாத வேள்வியைத் துவங்கினேன் எண்ணி எண்ணி எண்ணி ணிண்எ ணிண்எ ணிண்எ ண்எணி ண்எணி ண்எணி சுத்த சரியாய் இருக்கையில் திடீரென்று எங்கிருந்தோ ஒரு நட்சத்திரம் வந்தது அதையும் சேர்த்தேன் மீண்டும் ஒன்று இப்படியாக ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் வந்துகொண்டேயிருந்தன ஓய்ந்தனாய் ஓய்ந்தனாகி ஓய்ந்தனானேன் நான் குறித்து வைத்திருந்த அந்த எண்ணிக்கைச் சீட்டை கிழித்து எறிந்தேன் நிர்மல வானத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டி தம்மையே சிமிட்டிக்கொண்டன நான் என் மூலையில் சுருண்டிருந்தேன் |