பக்கம் எண் :

230ஆத்மாநாம் படைப்புகள்

‘அறியாத முகங்கள்’

விமலாதித்த மாமல்லனின்
சிறுகதைகள்

ன்றைக்கு எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறுகதைக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும். அந்த அளவுக்குப் பெரும்பத்திரிகைகள் கவர்ச்சி அரசியல் சினிமா மதம் மற்ற மசாலா அம்சங்களோடு வணிக இலக்கியத்தைக் காலம் தவறாது ஒரு உபாதையை நீக்கிக்கொள்வதுபோல் செயல்பட்டுவருகின்றன. இந்தப் போக்குகளிலிருந்து விடுபட்டு ஒரு ஈடுபாட்டுடன் கலை இலக்கியத்தைப் படைத்துக்கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரே. அப்படி உள்ளவர்களுக்கு இலக்கியத்தை செழுமைப்படுத்துவதுதான் முதல் நோக்கமாக இருக்கிறது. அவர்கள் வாழும் ஒவ்வொரு கணத்திலிருந்தும் கற்றுத் தேர்கின்றவற்றைக் கலாரீதியாக இலக்கியமாகப் படைக்கும்போது வாழ்க்கையின் புதிய பரிமாணத்தைக் கண்டு கொள்கிறார்கள். கோடிக்கணக்கான ஊசிகளால் தைக்கப்பட்டுள்ள மனித மனத்தின் ஒரு ஊசியை எடுத்துப் பார்த்து மீண்டும் பொருத்துகிறார்கள்.

நல்ல ஒரு கலைஞன் சூழலை மட்டும் முன்வைக்கிறான். தன்னுடைய கருத்தை அதில் திணிப்பதில்லை. எந்த ஒரு மரபையும் அவன் பின்பற்றுவதில்லை. தன்னையும் ஒரு மரபாக ஆக்கிக் கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஒருவனின் படைப்பு அது சிறுகதையோ, நாவலோ எதுவாக இருப்பினும் வாசகனின் மனத்தில் ஒரு உள்ளொளியைத் தோற்றுவிக்கிறது. ஒரு கணமேனும் இப்படிப்பட்ட படைப்பிலக்கியத்தை உருவாக்குபவர்கள் உள்ளொளி நிறைந்தவர்களாயிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.

ஆனால் வீச்சு என்பது படைப்பாளிக்குப் படைப்பாளி வேறுபடுகிறது. ஏனோதானோ என்றிருப்பவன் ஒரு படைப்பிலக்கிய கரத்தாவாக இருத்தல் அரிது. நிச்சயமானதொரு திசையை அவன் தேர்வு செய்கிறான். வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டமனித குணச்சித்திரங்களைச் சிறுகதை எழுதுபவன் படைக்கிறான், தனக்குத் திருப்தி அளிக்காதவற்றை நிராகரித்துக் கொண்டு. இப்படிப்பட்ட சூழலில் விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள் சில நமது கவனத்துக்கு வருகின்றன. இருபதாம் நூற்றாண்டு மனிதனின் பொதுவான குணாம்சங்கள் சிலவும் இவருக்கே உரித்தான தனியான குணாம்சங்கள் சிலவும் சிறுகதைகளில் வெளிப்படுகின்றன. எதிலிருந்தும் அந்நியப்படாமல் எதிலிருந்தோ அந்நியப்பட்டதாக நினைத்துக்