பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்229

இதில் வரும் ஜீவா அவனது பேச்சின் மூலம் அடையாளம் காட்டிக்கொள்கிறான். வாழ்க்கையின் பிரச்சினைகளைப் புத்தி பூர்வமாக அணுகுகிறான். பூதாகாரமாய்க் கிளம்பிவரும் பிரச்சினைகளுக்கிடையே அவன் மலைகலைப் பார்த்தவாறு அவற்றில் மூழ்கிவிடுகிறான்.

மேலும் இதில் வரும் லோகு, ஜீவா இருவருமே தனித்தனி நபர்களல்ல, ஒரே நபர்தான் என்பது சில பக்கங்களைப் புரட்டிய உடனே தெரிந்துவிடுகிறது.

ஜீவாவை உருவாக்கியதில் ஆனந்த் வெற்றி பெற்றிருக்கிறார். விவாதத்தில் ஜீவா வெற்றி பெறும்பொழுது ஆனந்தின் தர்க்க ரீதியான வாதம் வெற்றி பெறுகிறது. எழுதப்பட்டவை அனைத்தும் இலக்கியம் என்ற அளவில் இதனைப் படைப்பிலக்கியத்தில் சேர்க்கலாம்.

மொத்தத்தில் மனிதனைப் பற்றியோ உலகத்தைப் பற்றியோ ஏதேனும் புதிய பார்வையைக் கொணர்ந்திருக்கிறதா என்றால் ஏற்கெனவே உள்ள குழப்பத்தோடு இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கிறது என்று கூறலாம்.

வெளிப்படையாகத் தெரியாத உலகை நிராகரிக்கிற தன்மையில் இந்தக் கதை புதிய கோணத்தை அளித்திருக்கிறது.

சிட்டாடல் பதிப்பகத்தினர் இதனைக் கவர்ச்சிகரமாக வெளியிட்டுள்ளார்கள்.

 மீட்சி, எண் 5, 1983